

தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் இன்று (செப். 02) சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கொண்டுவந்தார்.
அப்போது, "24 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில் பல காலம் முடிவுற்ற பிறகும் 15 ஆண்டுகளைக் கடந்தும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடிகளில் கந்துவட்டிபோல ஏழை மக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், ஏழை மக்கள் மீது பொருளாதாரப் போர் தொடுக்கப்பட்டுள்ளது" என ஜவாஹிருல்லா பேசினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, "கேரளாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் தூரத்தைக் கணக்கிட்டபோது, ஐந்தாக இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை, மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் நெடுஞ்சாலைகளின் தூரத்தைக் கணக்கிடும்போது 16 சுங்கச்சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. ஆகவே, மீதமுள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்குவதற்கும் சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்திக் கடிதம் எழுதுவோம்" எனத் தெரிவித்தார்.