

பிற மாநிலங்கள் செயல்படுத்தாத பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருவது உள்ளிட்ட காரணங்களால், வரும் நிதியாண்டில் 9,154.78 கோடி ரூபாய் அளவிலான வருவாய்ப் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
நிதி ஆதாரங்கள், கடன் உள்ளிட்ட விவரம் குறித்து தனது பட்ஜெட் உரையில் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது:
2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் விவரம்:
* கடந்த இரண்டு ஆண்டுகளில், வரி வருவாயில் குறிப்பாக, வணிக வரி வருவாயில், காணப்பட்டு வந்த குறைவான வளர்ச்சி 2015-2016 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைக்கக்கூடிய விற்பனை வரி வருவாயும் பெருமளவு குறைந்து விட்டது. இதனால், ஆண்டுதோறும் மாநில அரசிற்கு சுமார் 4,000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையை மத்திய அரசு பலமுறை உயர்த்தி, தனது வருவாயைப் பெருக்கி தக்கவைத்துள்ளது. நமது அண்டை மாநிலங்களும் இது போன்றே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி வருவாய் இழப்பை ஈடுசெய்துள்ள போதிலும், இந்த அரசு இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை.
* 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 86,537.70 கோடி ரூபாயாக உள்ள மாநில சொந்த வரி வருவாய், 2016-2017 ஆம் நிதியாண்டில் 96,531.41 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்டதைவிட, வணிகவரி வருவாய் 11.69 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2016-2017 ஆம் நிதியாண்டில் 72,326.45 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
* மாநில ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய், வரும் நிதியாண்டில் 7,101.81 கோடி ரூபாயை எட்டும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், முத்திரைத் தாள்கள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருவாய் 10,548.25 கோடி ரூபாய் எனவும், வாகனங்கள் மீதான வரிகள் 4,925.05 கோடி ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 9,288.63 கோடி ரூபாய் எனவும், மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 23,688.11 கோடி ரூபாய் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
* பல மத்திய அரசுத் திட்டங்களின் நிதிப் பங்கீட்டு முறை 2015-2016 ஆம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், 2016-2017 ஆம் ஆண்டில் நமது மாநில அரசிற்கு 1,400 கோடி ரூபாயிலிருந்து 2,000 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த மாற்றங்களைக் கணக்கில் கொண்டு, 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானிய உதவி 22,496.08 கோடி ரூபாய் அளவில் மட்டுமே இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறையை தவிர்க்க இயலாதது ஏன்?
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் வரவுகள் 1,52,004.23 கோடி ரூபாய் எனவும், மொத்த வருவாய் செலவினங்கள் 1,61,159.01 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக வரும் நிதியாண்டில் 9,154.78 கோடி ரூபாய் அளவிலான வருவாய்ப் பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள குறைவால், குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதால், இத்தகைய பெரும் வருவாய்ப் பற்றாக்குறை தவிர்க்க இயலவில்லை என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன். மேலும், பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா மின் விசிறிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மடிக்கணினிகள் வழங்குதல், சிறப்பு பொது விநியோகத் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற, பிற மாநிலங்கள் செயல்படுத்தாத பல முன்னோடித் திட்டங்களை நமது மாநிலம் செயல்படுத்தி வருவதும் இதற்குக் காரணம்.
இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தாத பல மாநிலங்களும் பெரும் வருவாய்ப் பற்றாக்குறை நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனைக் கருத்தில் கொண்டு 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் இந்தப் பேரவை முன் வைக்கப்படும்போது, 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலைப் பொறுப்புடைமைச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.
* 2015-2016 திருத்த மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 32,359.59 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.94 சதவீதமாகும். 2016-2017 ஆம் ஆண்டில் இப்பற்றாக்குறை 36,740.11 கோடி ரூபாயாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பதினான்காவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டே இருக்கும்.
* வரும் நிதியாண்டில் 37,782 கோடி ரூபாய் வரை கடன் வாங்க மாநிலத்திற்கு தகுதியுள்ள போதிலும், 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கடன் அளவு 35,129 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக்காலம் முழுவதிலும் நிதி ஆதாரங்களைக் கையாள்வதில் மிகப் பொறுப்போடு செயல்பட்டு, நிதிப் பற்றாக்குறை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மொத்தக் கடனின் விகிதம் போன்ற பல்வேறு நிதிக் குறியீடுகளை, வரையறைக்கு உட்பட்டு பின்பற்றி இந்த அரசு செயல்பட்டுள்ளது.
இடைப்பட்ட கால நிதி நிலவரத் திட்டம்:
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி பதினான்காவது நிதி ஆணையம் மதிப்பிட்ட அளவிலேயே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2016-2017 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேலும் உயரும் எனவும், பண வீக்கம் மிதமான அளவில் இருக்குமெனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வருவாய்க் கணக்கு வரவுகள்
மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.1,52,004.23 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசின் சொந்த வரி வருவாய்: 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டின்படி மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.86,537.70 கோடியாகும். 2016-2017 ஆம் ஆண்டில் இது ரூ.96,531.41 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 11.55 சதவீத வளர்ச்சியாகும். 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 7.66 சதவீதமாக இருக்கும். 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் முறையே 14.65 மற்றும் 14.66 சதவீத வளர்ச்சி கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வணிக வரியின் மூலம் பெறப்படும் வருவாய் வரவுகள், 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளை விட 11.69 சதவீதம் உயர்ந்து, ரூ.72,326.45 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டில் மாநில ஆயத்தீர்வைகளின் மூலம் வரவுகள் ரூ.7,101.81 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய போக்குகளின் அடிப்படையில், 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளை விட 10.47 சதவீதம் அதிகமாக இருக்கும் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாகக் கிடைக்கும் வரவுகள், 11.39 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் ரூ.9,469.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள வருவாய், 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.10,548.25 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* மோட்டார் வாகன வரிவருவாய் 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் ரூ.4,385 கோடி என்று மதிப்பிட்டுள்ளதைவிட உயர்ந்து, 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.4,925.05 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி அல்லாத வருவாய்:
இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2016-2017ல் வரி அல்லாத வருவாய் ரூ.9,288.63 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 மற்றும், 2018-2019 ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு:
2016-2017 ஆம் ஆண்டில் மத்திய வரிகளில் நமது மாநிலத்திற்கான பங்கு ரூ.23,688.11 கோடியாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 மற்றம் 2018-2019 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்:
* 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.22,496.08 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முதல் மத்திய அரசு பொறுப்பேற்கும் பெரும்பாலான திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கினை 60 சதவீதமாகக் குறைத்துள்ளது.
2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடானது மத்திய அரசிடமிருந்து வரப்பெறவேண்டிய மத்திய விற்பனை வரிக்கான இழப்பீட்டுத் தொகையையும் உள்ளடக்கியதாகும். இவை அனைத்தையும் கணக்கிற்கொண்டு, 2017-2018, 2018-2019 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் முறையே 12 மற்றும் 10 சதவீதமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
வருவாய்க் கணக்கில் செலவுகள்:
2016-2017 ஆம் ஆண்டிற்கான வருவாய்க் கணக்கு செலவுகள் ரூ.1,61,159.01 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2015-2016 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை விட 9.05 சதவீதம் கூடுதலாகும்.
* 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.62,382.40 கோடியாகும்.
2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 10,361.59 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
* 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் வட்டி செலுத்துதல் ரூ.21,304.48 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த வருவாய்ச் செலவுகளில் 13.22 சதவீதமாகும்.
2016-2017 ஆம் ஆண்டிற்கான வட்டிச் செலவு மொத்த வருவாய் வரவில் 14.02 சதவீதமாகும். இது, 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளிலும் 14 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதனக் கணக்கில் செலவுகள்:
2016-2017 ஆம் ஆண்டில் மூலதனம் குறித்த செலவுகளை பெருமளவு உயர்த்த மாநில அரசு கருதியுள்ளது. அதன் விளைவாக, மூலதனம் குறித்த செலவுகளுக்கு 2015-2016 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடான ரூ.22,878.45 கோடி, 2016-2017 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.27,585.33 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2017-2018 ஆம் ஆண்டில் 10.88 சதவீதம் மற்றும் 2018-2019 ஆம் ஆண்டில் 10.97 சதவீதமாகவும் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை:
2016-2017 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.9,154.78 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.36,740.11 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடன்
2016-2017 ஆம் ஆண்டில் ரூ.37,782 கோடி அளவிற்கு கடன் திரட்டுவதற்கு மாநில அரசிற்கு அனுமதியுள்ளபோதிலும், கடன் வாங்குவதை கடந்த காலங்களைப் போல் கட்டுப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது. 2016-2017 ஆம் ஆண்டில் நிகர கடன் வாங்குதல் ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31.03.2017 அன்று, ரூ.2,47,031 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.62 சதவீதம் மட்டுமே ஆகும்.
வீழ்ச்சிக்குக் காரணம்...
விற்பனை வரி, குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் பெறப்படும் வரி குறைந்துள்ளதே, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு காரணமாகும். மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு குறைந்ததும், மத்திய அரசால் காலம் தாழ்த்தி உதவி மானியங்கள் விடுவிக்கப்படுவதும், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தனது பங்கினை குறைத்துள்ளதும் மாநிலத்தின் நிதிநிலைய பாதித்துள்ளது.
எனினும், செலவுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன; செலவுகளின் பாங்கும் நிலையாக உள்ளது. 2017-2018 ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில், அந்த ஆண்டைத் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில், ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை, நிகர கடன், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் ஆகியவை, வருவாய் வரவுகளில் சுணக்கம் உள்ள நிலையிலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்படும். மாநில பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, அரசு அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது" என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.