

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் இன்று தேனியில் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று (செப்.1) காலை மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார். இறந்த விஜயலட்சுமியின் உடலுக்கு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். சசிகலாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே விஜயலட்சுமியின் உடல் நேற்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இன்று (செப். 02) உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் இறுதி மரியாதை செலுத்துவதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், காமராஜ் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். தொடர்ந்து காரில் புறப்பட்டு பெரியகுளம் சென்றனர்.
முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் வருவது தெரிந்ததும் ஓபிஎஸ் இல்லத்தில் அதிகப்படியான கூட்டம் கூடியது. இதனால் எடப்பாடி பழனிசாமி உள்ளே செல்ல முடியாமல் வீட்டிற்கு வெளியே 10 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருந்து, பின்னர் உள்ளே சென்று அஞ்சலி செலுத்தினார்.
திமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் ஓபிஎஸ் மனைவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பெரியகுளம் நகராட்சி எரிவாயு தகன மேடையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.