

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறை வேற்றும் அரசாணையை இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என, அவிநாசியில் நடை பெறும் போராட்டத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அவிநாசியில் தொடங் கப்பட்டுள்ள காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம், 6-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தே.பிரபாகரன், பி.கே.வெள் ளியங்கிரி, எம்.வேலுச்சாமி, தெ.மா.சுப்பு, எம்.எஸ்.சம்பத்குமார், வி.கே.ஈஸ்வர மூர்த்தி, ஏ.ராஜேஷ்குமார், ஏ.பழனிச்சாமி, எஸ்.நவின்பிரபு, ஏ. ரமேஷ்குமார், எம். விஷ்ணுவெங்கடாச்சல மூர்த்தி, பி.சண்முகசுந்தரம், கே.சதிஷ்குமார், எம்.வெற்றிவேல் ஆகியோரின் உடல் நிலை மிகவும் சோர்வடைந்து வருகிறது.
போராட்டக்காரர்கள் சிலர் கூறிய தாவது: வரும் 16-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தொடங்குகிறது. அதில், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றும் அரசாணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
திட்டத்தை நிறைவேற்றும்வரை, எங்களது போராட்டம் தொடரும். போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அன்னூரில் 3-ம் நாள் போராட்டமும், பெருமாநல்லூர், சேவூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில் போராட் டத்தையும் தற்போது தொடங்கியுள்ளனர்.
மனிதச் சங்கிலி போராட்டம்
திருப்பூர் ஆட்சியரிடம் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு உரிய பதில் அளிக்கவில்லை என அதிருப்தி அடைந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு
திருப்பூர் வடக்குப் பகுதி விவசாயிகள் அனைவரும், நாளை (பிப்.15) குடும்ப அட்டைகளை, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது, அத்திக்கடவுத் திட்டம் பயன்பெறும் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பது, மேலும் அனைத்துப் பகுதிகளிலும் சுயவேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, தொரவலூரில் நேற்று நடந்த போராட் டக்காரர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களில் வாழும், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத் தேவை யாக அவிநாசி-அத்திக்கடவு திட்டம் இருப்பதால், வீடுதோறும் கருப்புக்கொடி, கடையடைப்பு என போராட்டம் வேகமெடுத்துள்ளது.