Published : 18 Feb 2016 09:29 AM
Last Updated : 18 Feb 2016 09:29 AM

ஸ்டாலின் மருமகன் குறித்து பேசியதால் சர்ச்சை - பேரவையில் கடும் அமளி: திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

ஸ்டாலின் மருமகன் குறித்து அதிமுக உறுப்பினர் தெரிவித்த கருத்தால் சட்டப்பேரவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது. பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய விளாத்தி குளம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், திமுக சட்டப்பேரவை குழு தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் பேரவைத் தலைவர் தனபால் இருக்கையை முற்றுகை யிட்டனர். அப்போது, ஸ்டாலின் பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதித்தார். இதையடுத்து, ஸ்டாலின் எழுந்து பேசினார். ஆனால், அவர் தெரிவித்த கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இதற்கும் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு பேரவை தலைவர் தனபால், ‘‘அவைக் குறிப்பில் இருப்பதை பார்த்து தான் முடிவெடுப்பேன். இது தொடர்பாக என்னை நிர்பந்திக்க முடியாது. என் இருக்கை அருகில் வந்து முற்றுகையிடுவது முறையல்ல. உங்கள் இடத்தில் அமரா விட்டால், நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’’ என திமுகவினரை எச்சரித்தார்.

அப்போது, அவை முன்னவரான அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் திமுகவினரை சமா தானப்படுத்த முயன்றனர். அதை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதால், பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி, அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். அப்போது, திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கை அருகில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

பேரவைத் தலைவர் தனபால் பேசும்போது, ‘‘தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதுடன், அன்பழகன் உள்ளிட்டோர் என்னை ஒருமையில் பேசினர். தொடர்ந்து முற்றுகையிட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்றினேன்’’ என்றார்.

பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர், பேரவைத் தலைவருக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர். இந்த அமளியால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஸ்டாலின் பேட்டி

பின்னர், பேரவை வளாகத்தில் நிருபர் களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

பேரவையில் அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன், இடைக்கால பட்ஜெட் மீது 30 நிமிடங்களுக்கு மேலாக பேசினார். தேவையில்லாமல் என் மருமகன் சபரீசன் பற்றி ஒரு வார்த்தையை அவையில் பதிவு செய்தார். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினோம். அவர் நீக்கவில்லை.

பிறகு நான் பேசும்போது, ‘சபரீசன் என்னுடைய மருமகன், ஜெயலலிதா வீட்டில் இருக்கும் சசிகலா யார்?’ என கேட்டேன். உடனே நான் பேசியதை பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். அதிமுக உறுப்பினர் கூறியதையும் நீக்க வேண்டியதுதானே என கேட்டோம். ஆனால், பேரவைத் தலைவர் அதை ஏற்காமல், எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். பேரவையின் மரபைக்கூட பாதுகாக்கத் தெரியாத ஒரு பேரவைத் தலைவரை 5 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x