தமிழகத்தில் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்தது; 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்: லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் 8 முதல் 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு நேற்று முதல் அமலானது. போதிய கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 6,606 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ. சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மொத்தம் 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, 24 சுங்கச்சாவடிகளில் 8 முதல் 10 சதவீதம் வரையில் கட்டண உயர்வு நேற்று (செப்டம்பர் 1) முதல் அமலானது.
அதன்படி திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி, திருப்பராய்த்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பத்தி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உள்ளிட்ட 24 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, வாகன ஓட்டிகளும், லாரி உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில இடங்களில் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் தேவையான இடங்களில் விரிவாக்கம் செய்ய ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஆனால், சில இடங்களில் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற்கொள்வதில்லை. சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. இதனால், சில இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டும்.
தமிழக அரசு சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட தொகை, எந்த ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை கண்டறிந்திட ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். குறிப்பாக, செங்குன்றம் - தடா, மதுரவாயல் - தாம்பரம், பரனூர், உளுந்தூர்பேட்டை, வானகரம் - வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
