

சட்டப்பேரவையில் வீட்டுவசதி, சமூக நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது வந்தவாசி தொகுதி திமுக உறுப்பினர் அம்பேத்குமார் பேசியதாவது:
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருப்பவர்கள், குழுவின் அறிக்கை எப்போது கிடைக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும்.
அதேபோல, மவுலிவாக்கம் சம்பவத்தில் அப்போதிருந்த அமைச்சர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் மற்றும் வடிவமைப்பு அனுமதி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் கட்டிட தளப்பரப்பு குறியீடு அனுமதி 2 மடங்காக உள்ளது. இதை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘‘புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தை ஆய்வு செய்யும் பணியில், சென்னை ஐஐடியின் சார்பு அமைப்பான கியூப் நிறுவனத்தின் பேராசிரியர் பத்மநாபன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. இந்த குழுவானது 2 வாரத்தில் தனது அறிக்கையை அளிப்பதாகக் கூறியுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.