

சமூக வலைதளங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க சைபர் கிரைம் போலீஸார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சைபர் கிரைம் மோசடிகள் நூதன முறையில் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக பெண்கள் பெயரில் முகநூலில் கணக்கு ஒன்றை உருவாக்கி ஆண்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார்கள் அதிகஅளவில் வருகின்றன.
வடமாநில கும்பல்
இளம்பெண்களின் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, ஆண்களிடம் பழகி அந்த நபரின் செல்போன் எண்ணை பெற்றுகொண்டு, பின்னர் வாட்ஸ் அப் வீடியோ காலில் ஆபாசமாக தோன்றச் செய்து அதைபதிவு செய்து பின்னர் அதை நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
இதுபோன்ற மோசடியில் சிக்கிமருத்துவ மாணவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடைய வடமாநில கும்பலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைபர் கிரைம் போலீஸார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ‘இதுபோன்ற மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும். இதில் சிக்கியவர்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்க வேண்டும். மானத்துக்கு பயந்து பணத்தை இழக்க வேண்டாம்' என அந்த விழிப்புணர்வு வீடியோவில் வலியுறுத்தியுள்ளனர்.