

கிராம ஆவணங்களில் மாற்றம் செய்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், காயார் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் தாம்பரம் கோட்டம், வண்டலூர் வட்டம், கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா ஆகிய இருவர் கிராம அடங்கலில் தவறான தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு பதிவு செய்தமையால், மாவட்ட நிர்வாகப் பணிகளில் குந்தகம் ஏற்படுத்தியதற்காக வருவாய் கோட்டாட்சியர்களின் உத்தரவின்படி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதே போல் கொளத்தூர் கிராம நிர்வாக உதவியாளர் பாண்டியராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: பல ஆண்டுகளாக விவசாயம் நடைபெறாத நிலம், வீட்டுமனையாக மாற்றம் செய்ய வேண்டி காயார் மற்றும் கொளத்தூர் கிராமத்தில் நிலத்தின் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு செய்திருந்தனர். அதன் உண்மைத்தன்மையை உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர்கள் வீட்டுமனையாக மாற்றப்படும் விவசாய நிலத்தை அங்கு விவசாயம் நடைபெறுகிறது என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். பின்னர் ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது விவசாயம் நடைபெறவில்லை என ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளனர். இதையடுத்து ஆவணங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை தாக்கல் செய்யும்போது அந்த அறிக்கையை வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் யாரும் ஆய்வு செய்யவில்லை. இவர்கள் ஆய்வு செய்து இருந்தால் அந்தத் தவறை அப்போதே கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், இவர்கள் தவறை மறைக்க கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பழியை சுமத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.