

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, இந்திய தகுதித் தேர்வு (எப்.எம்.ஜி.) எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சலுகைக் கட்டணத்தில், உதவித் தொகையுடனும் கூடிய உள்ளுறைப் பயிற்சி அளிக்க அரசுத் தரப்பில் ஆவண செய்வதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார்.
லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனர் முகமது கனி, இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரைச் சந்தித்து, பிரச்சினையை விளக்கி மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், "மற்ற மாநிலங்களில் உள்ளுறை மருத்துவராகப் பயிற்சி பெற அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்ப பரிசீலனைக் கட்டணமாக ரூ.20,000 முதல் ரூ.32,000 வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வேறு எந்தவிதக் கட்டணமும் இன்றி உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு பயிற்சிக்கு வெளிநாடுகளில் படித்து இந்தியத் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்துக்கு மிகப்பெரிய இழப்பு
ஆனால், தமிழ்நாட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன், பயிற்சியின்போது ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் தமிழக இளம் மருத்துவர்கள், அண்டை மாநிலங்களில் பயிற்சி பெற்று அங்கேயே பணி செய்ய முடிவெடுக்கின்றனர். இது அதிக அளவில் மருத்துவர்கள் தேவை உள்ள தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து உடனே நல்ல முடிவு எடுப்பதாக லிம்ரா முகமது கனியிடம் அமைச்சர் உறுதியளித்தார்.