

தனுஷ்கோடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1964-ம் ஆண்டு தனுஷ்கோடி புயலில் சேதமடைந்தது. அதன்பின் 40 ஆண்டுகளுக்கு பின்பு 2004-ம் ஆண்டில் அங்கு பள்ளியை மாவட்ட நிர்வாகம் சீரமைத்தது.
தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் (2021-22) 65 மாணவர்கள் படிக்கிறார்கள். 4 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். கரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பள்ளி மூடப்பட்டிருந்தது. இப்பள்ளிக் கட்டிடம் பைபர் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் வீசும் கடல் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கூரை சேதமடைந்துவிட்டது. பள்ளியில் மின்சார வசதியில்லை.
ராமநாதபுரம் முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லா மற்றும் தனியார் அமைப்பு ஒன்று வழங்கிய சோலார் பேனல்களும் சேதமடைந்துள்ளன. குடிநீர் கிணறு தூர்வாராமல் மாசு அடைந்தும், கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் மணல் மூடியும் காணப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் கூறிய தாவது:
அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.