

கும்பகோணம் மகாமகக் குளத்தில் வரும் மார்ச் 13-ம் தேதி வரை புனித நீராடலாம் என்று கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.பி.வித்யாதரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் மகாமகம் கிரக அமைப்பு குறித்து கும்பகோணம் கோவிந்தபுரத்தில் நேற்று அவர் கூறியதாவது: இதுவரை நடைபெற்ற மகாமகங்களைக் காட்டிலும் இப்போது நடைபெறும் மகாமகம் அருமையான கிரக அமைப்புகளுடன் திகழ்கிறது.
ஆத்மகாரகன் சூரியனுடனும் ஞானக்காரகன் கேதுவும், வேத மந்திரங்களுக்குரிய கிரகமான குருவுடன் ராகுவும் அமர்ந்திருக்கும் நல்ல கிரக அமைப்பில் இந்த மகாமகம் நிகழ்வதால் உலகெங்கும் சுபிட்சம் உண்டாகும். மழை பொழியும், மகசூலும் அதிகரிக்கும்.
ராஜகிரகங்களான குருவும், சனியும் பரஸ்பரம் கேந்திரம் பெற்று காணப்படுவதால் ஆன்மிகம் தழைக்கும். பூமிகாரகன் செவ்வாய், குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்கும் நேரத்தில் இந்த மகாமகம் நிகழ்வதால் மகாமகக் குளத்தில் நீராடுபவர்களில் பல வருடங்களாக வரன் பார்த்தும் அமையாமல் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் திருமணம் முடியும்.
மார்ச் 13-ம் தேதி வரை மாசி மாதம் இருப்பதால் 13-ம் தேதி வரை மகாமகக் குளத்தில் புனித நீராடலாம். 1.3.1980, 18.2.1992, 6.3.2004-ல் நடைபெற்ற மகாமக கிரக அமைப்புகளைக் காட்டிலும் இந்த வருடம் மகாமக நிகழும் கிரக சேர்க்கைகள் சிறப்பாக உள்ளதால் புனித நீராடும் அனைவருக்கும் புண்ணியம் கைகூடும் என கே.பி.வித்யாதரன் தெரிவித்துள்ளார்