

ஓடும் பஸ்ஸில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, பஸ்ஸை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை கோயம்பேட்டியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று காலை 8 மணியளவில் அரசு பஸ் தடம் எண்.76 பி சென்றது. காஞ்சிபுரம் பி.கே.நம்பி தெருவை சேர்ந்த சர்வேஸ்வரன் (51) பஸ்ஸை ஓட்டினார். சுமார் 50 பயணிகள் பஸ்ஸில் இருந்தனர். மதுர வாயல் மார்க்கெட் அருகே பஸ் சென்றபோது, ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த அவர் பஸ்ஸை பாதுகாப்பாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி, அருகே இருந்த மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.
ஆனால், மருத்துவமனை வளா கத்துக்குள் சென்ற நிலையில் சர்வேஸ்வரன் மயங்கி விழுந்துவிட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பஸ் ஓடிக்கொண்டு இருக்கும்போது அவர் இறந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் உயிர் போகும் நிலையிலும் பயணிகள் மீது அக்கறை காட்டிய ஓட்டுநர் சர்வேஸ்வரனை நினைத்து பயணிகள் பெருமிதம் அடைந்தனர். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பஸ்ஸில் அனுப்பிவைக்கப்பட்டனர்.