

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலியில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்திருக்கின்றன. இதனால், இந்த சிலைகளை உருவாக்கிய கலைஞர்கள் வருமானமின்றி தவிக்கிறார்கள்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, வீடுகளிலேயே நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுஇடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் அவற்றை கரைக்கவும், கடந்த ஆண்டும், தற்போதும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இத்தடையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பிரம்மாண்ட உருவங்களில் தயாரான விநாயகர் சிலைகள் வாங்கப்படாமல் கூடங்களிலேயே இரு ஆண்டுகளாக தேங்கி யிருக்கின்றன.
பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சாலையிலுள்ள கூடத்தில் இரண்டரை அடி முதல் 10 அடி உயரம் வரை யிலான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ராஜஸ்தானைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் கடந்த ஆண்டு தயார் செய்த பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின. இவற்றை இந்தாண்டாவது விற்பனை செய்துவிடலாம் என்று காத்திருந்தனர். இவ்வாண்டு புதிதாக சிலைகளை தயாரிக்காமல், ஏற்கெனவே தேக்கமடைந்திருந்த சிலைகளை புனரமைப்பு செய்தும், வர்ணம் பூசியும் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்புவரை திருநெல்வேலி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பலரும் சிலைகளுக்கான ஆர்டர்களை கொடுத்துவந்தனர். இந்நிலையில், அரசு பிறப்பித்த தடை காரணமாக, ஆர்டர்கள் திரும்பப்பெறப்பட்டு, கொடுத்த தொகையையும் பலரும் திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இது, கலைஞர்களுக்கும், தொழி லாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செய்வதறி யாது அவர்கள் திகைத் துள்ளனர்.
இதுகுறித்து, ராஜஸ்தானை சேர்ந்த கலைஞர் மோடாராம் கண்ணீர் மல்க கூறியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டில் நவராத்திரி விழா முடிந்ததும், அடுத்துவரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்திருந்தோம். இதற்கான மூலப்பொருட்களை வாங்கவும், சிலைகளை தயாரித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் கூடத்தை அமைக்கவும், இடத்துக்கான வாடகை அளிக்கவும் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தோம். ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேங்கின. இவ்வாண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.20 லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் தேக்கமடைந்திருக்கின்றன. இந்த சிலைகள் அடுத்த ஆண்டுவரை உறுதித் தன்மையுடன் இருக்குமா என்பது தெரியாது. கடந்த ஓராண்டாகவே பல சிலைகள் சேதமடைந்து விட்டன. கடந்த ஆண்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில், இவ்வாண்டும் தடை காரணமாக சிலைகள் விற்பனை தடைபட்டுள்ளது. வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையும் எப்படி செலுத்துவது என்பது தெரியவில்லை என்று கூறினார்.