

இந்தியாவின் முக்கிய முதன்மை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா இருப்பதாகவும், கோவையில் உள்ள தொழில் துறையினருடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக துணைத் தூதர் ஜூடித் ரேவின் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் இந்தியத் தொழில் வர்த்தக சபை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்வு கோவையில் உள்ள இந்தியத் தொழில் வர்த்தக சபை அரங்கில் இன்று நடைபெற்றது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத் துணைத் தூதர் ஜூடித் ரேவின், இதில் கலந்துகொண்டு இந்தியத் தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இதில் இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் (கோவை கிளை) சி.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் துணைத் தூதர் ஜூடித் ரேவின் பேசும்போது, ''சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கிய முதன்மை ஏற்றுமதி சந்தையாகவும், அந்நிய நேரடி முதலீட்டுக்கான முக்கிய ஆதாரமாகவும் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் உள்ள தொழில் துறையினருக்கு சாதகமாகவும், எளிமையாகவும் உள்ள மிகப்பெரும் சந்தை வாய்ப்பு, முதலீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் அங்கு பெரும் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெற்றுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த வளர்ச்சி இன்னும் கூடுதலாக ஏற்பட வேண்டும் கோவையில் உள்ள தொழில் சமூகத்தினருடன் நட்புறவு கொள்ளவும், இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். அதற்காகவே கோவை வந்துள்ளோம்'' என்று ஜூடித் ரேவின் தெரிவித்தார்.
முன்னதாக இந்தியத் தொழில் வர்த்தக சபையின் தலைவர் சி.பாலசுப்ரமணியன் கூட்டத்தில் பேசும்போது, ''இந்தியத் தொழில் வர்த்தக சபை கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த சேவையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 1660 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றனர்.
கோவையைப் பொறுத்தவரை பம்ப் செட், ஆட்டோமொபைல், ஜவுளி, இயந்திரங்கள், நகைகள், கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் துறைகள் சார்ந்து ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில் அமெரிக்கத் தூதரக துணைத் தூதருடனான சந்திப்பு நிச்சயமாக இருதரப்பு தொழில் வளர்ச்சிக்கு உதவும்'' என்று தெரிவித்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் துணைத் தூதராகப் பொறுப்பேற்ற பிறகு ஜூடித் ரேவின் முதன்முறையாக இன்று கோவை வந்தது குறிப்பிடத்தக்கது.