

நாள்தோறும் 7 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று (செப். 01) முதல், கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அரசின் சார்பில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, அமைச்சர் லயோலா கல்லூரியில் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா எனச் சான்றிதழ்களைச் சரிபார்த்து ஆய்வு செய்தார். மேலும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின்படி இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், வகுப்பறைகளில் கை கழுவும் திரவங்கள் உள்ளதா என நேரடியாகச் சென்று பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
இதன்பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
"கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என்கின்ற நிலையில், முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மத்திய அரசிடமிருந்து கோவிட் தடுப்பூசிகள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் அரசின் சார்பில் 3 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 241 தடுப்பூசிகளும், தமிழக முதல்வரின் நடவடிக்கையின் காரணமாக, தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர் திட்டம் உட்பட பல்வேறு நிலைகளில் 21 லட்சத்து 28 ஆயிரத்து 72 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 313 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நேற்றைய தினம் அதிகபட்சமாக ஒரே நாளில் 5 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல்வர் தமிழகத்தில் நாள்தோறும் 7 லட்சம் முதல் 8 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தடுப்பூசி கையிருப்பினைப் பொறுத்து நாள்தோறும் 7 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கடந்த ஓராண்டுக்கு மேலாக கரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தகுந்த கோவிட் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிகளும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளும் இன்று முதல் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என அரசின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி விரைவாகச் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 122 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று முதல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், லயோலா கல்லூரியில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாமினையும், வகுப்பறைகளையும் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் சார்பில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின்படி இருக்கைகள் சரியான இடைவெளியுடனும், கிருமி நாசினி திரவங்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது மற்றும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள தடுப்பூசி சிறப்பு முகாமில் சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் 1,450 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 587 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் சுமார் 18 லட்சம் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் நாள் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மே 6-ம் தேதி வரை நாளொன்றுக்கு சராசரியாக 61,441 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு சுமார் 63 லட்சம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முதல்வர் மே 7-ம் தேதி பொறுப்பேற்றவுடன் கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக 116 நாட்களில் சுமார் 2 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.