

6 மாத காலத்துக்குப் பிறகுதான் திமுக அரசின் செயல்பாடுகளில் எங்களது நிலைப்பாடு குறித்துக் கூற முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் விஜய பிரபாகரன் இன்று கலந்துகொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன் கூறும்போது, ’’தேர்தலில் வெற்றி- தோல்வி என்பது சகஜம். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தொய்வு அடைந்துவிட்டது என்று கூறுவது தவறான கருத்து. ஒவ்வொரு தேர்தலிலும் நிலைமை மாறும். தோல்வியை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா செல்லவில்லை. சிகிச்சைக்காக துபாய் நாட்டுக்குத்தான் சென்றுள்ளார். அவரது உடல் நலனில் இந்த முறை நல்ல மாற்றம் இருக்கும்.
திமுக அரசு இதுவரை சிறப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுவதுபோல், 6 மாத காலத்துக்குப் பிறகுதான் திமுக அரசின் செயல்பாடுகளில் எங்களது நிலைப்பாடு குறித்துக் கூற முடியும்’’ என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.