

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்குத் தொகை செலுத்தி பாடநூலைப் புதுச்சேரி கல்வித்துறை வாங்கவில்லை. பள்ளிகள் திறந்தும் பாடநூல்கள் தரப்படாத சூழல் உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட சூழலில் திமுக எம்எல்ஏ நாஜிம் சட்டப்பேரவையில் பேசினார். அவர் கூறும்போது, "அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை பாடநூல்கள் தரப்படவில்லை. தமிழகத்தில் பாடநூல்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், புதுச்சேரியில் தரவில்லை. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்குப் பாடநூலுக்கான தொகையைப் பல மாதங்களாகச் செலுத்தாமல், கிடங்கில் பாடநூல்கள் உள்ளதாகத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் குறிப்பிட்டார். எப்போது அரசுப் பள்ளிகளுக்குப் பாடநூல்களைத் தருவீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் எழுந்து பதில் தரவில்லை. அதை நாஜிம் குறிப்பிட்டார். இந்த வாரத்தில் தர நடவடிக்கை எடுப்பதாக அமர்ந்தவாறே கல்வியமைச்சர் பதில் தந்தார்.
அதேபோல் சுயேச்சை எம்எல்ஏ நேரு, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்படவில்லை. மதிய உணவும் தரப்படுவதில்லை. மதியம் 1 மணிக்குப் பள்ளி முடிந்து, பசியோடு பயணித்து வீடு செல்ல இரண்டு மணி நேரமாகிவிடும்" என்று தெரிவித்தார்.
அதற்குக் கல்வியமைச்சர் நமச்சிவாயம், "பேருந்து வசதியை ஏற்பாடு செய்யக் கூறுகிறோம். மதிய உணவை வீட்டில் சாப்பிடலாம். காலை உணவு தர ஏற்பாடு செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 75 சதவீதக் கட்டணம் வசூலுக்கு பதிலாக 100 சதவீதக் கட்டணம் வசூலிப்பதாக புகார்களைத் தெரிவித்ததற்கு, "பள்ளிகளின் பெயருடன் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கூறுகையில், "கல்வித்துறைக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் செயல்பாடுகளைப் போல் அரசுப் பள்ளிகளைப் புதுச்சேரியிலும் மாற்றவேண்டும்" என்று தெரிவித்தார்.
இறுதியில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் பதில் கூறுகையில், "எட்டாவது வரை அரசுப் பள்ளிகளில் சேர மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்பதைக் கடுமையாக அமலாக்குவோம். அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் இடம் தருவதுடன் தேவையான வசதிகளையும் உருவாக்குவோம். அரசுப் பள்ளியை நாடுவோரிடம் இடமில்லை என மறுக்கக் கூடாது. 200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளைத் தொடங்க உள்ளோம். ஐந்து பள்ளிகளை மாதிரிப் பள்ளியாக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.