Last Updated : 01 Sep, 2021 11:10 AM

 

Published : 01 Sep 2021 11:10 AM
Last Updated : 01 Sep 2021 11:10 AM

ஈபிஎஸ் மீதான குற்றச்சாட்டு; எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை: தினகரன்

எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், பயப்பட வேண்டிய அவசியமில்லை என, எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

அமமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க திருச்சி வந்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப். 01) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என் நிலை" என்றும், அதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, "ரகசியம் - பரம ரகசியம்" என்றும் பதிலளித்தது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தினகரன், "அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

கோடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். எனவே, எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் பயப்பட வேண்டிய அவசியமில்லை'' என்று தினகரன் பதில் அளித்தார்.

ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் அரசின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, "தேவையில்லாத விஷயத்தைச் செய்கின்றனர். ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை அப்படியே தொடர அனுமதிப்பதுதான் பெருந்தன்மையான அரசுக்கு அடையாளம். அதை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x