மக்கள் தொகை பெருக்கம் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய பரிசீலனை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மக்கள் தொகை பெருக்கம் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய பரிசீலனை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்வது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளதால் பரிசீலித்து முடிவு அறி விக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன், ‘‘சேலம், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியானது. தற்போது60 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில்,வார்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

சேலம் மாநகராட்சியில் வார்டு வரையறை முடிக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சேலம் மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கைகள் வந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேலம் மாநகராட்சியில் 8 லட்சத்து 29,267 பேர் உள்ளனர். தற்போது 2021-ம் ஆண்டு கணக்கின்படி, 9 லட்சத்து 52 ஆயிரமாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது.

சேலம் மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வருகின்றன. எனவே, மக்கள் தொகை பெருக்கம், வந்த கோரிக்கைகள் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் வார்டு மறுவரையறை செய்வதுஅரசின் பரிசீலனையில் உள்ளது.

இப்போது, மாநகராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் வார்டு எண்ணிக்கை அளவு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 52 வார்டுகள், 3 முதல் 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் 58 வார்டுகள், 4.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை - 63, 6 முதல் 8 லட்சம்வரை- 69, 8 முதல் 10 லட்சம் வரை - 75, 10 முதல் 15 லட்சம் வரை - 88,15 முதல் 20 லட்சம் வரை - 100 வார்டுகள், 20 முதல் 30 லட்சம் வரை -121,30 முதல் 40 லட்சம் வரை - 142,40 முதல் 50 லட்சம் வரை 161, 50 முதல் 60 லட்சம் வரை - 180,60 லட்சத்துக்கு மேல் 200 வார்டுகள்என்ற வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வந்துள்ள கோரிக்கைஅடிப்படையில் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in