

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
குடிநீரில் கழிவுநீர் கலப்பு
மாநகராட்சியின் 96-வது வார்டு, அயனாவரம் பாரதிநகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு, கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்பணி முடிந்ததிலிருந்து, அங்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. தண்ணீர் கலங்கலாக துர்நாற்றத்துடன் வருவதால் எதற்கும் பயன்படுத்த முடியவில்லை. தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குடிநீரில் கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டும். கே.தியாகராஜன், அயனாவரம்.
பூட்டிக் கிடக்கும் கழிப்பறை
தரமணியில் மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இயங்கி வருகிறது. அங்குள்ள கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. வாரிய பணியாளர்கள் மட்டும் திறந்து பயன்படுத்திவிட்டு பூட்டிவிடுகின்றனர். பயிற்சிக்காக வரும் இளைஞர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அந்த கழிப்பறையை பொது பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும். ஆண்ட்ரூ, தரமணி.
நிறுத்தப்பட்ட குடிநீர் பணி
பம்மல் இரட்டை பிள்ளையார் கோயிலில் இருந்து பிரதான சாலை வரை மெட்ரோ குடிநீர் பணிகளுக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மழை வெள்ளமும் ஏற்பட்டது. இப்போது அந்த சாலை மேடு, பள்ளங்களாகவும், ஆங்காங்கே கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டும் கிடக்கின்றன. அந்த சாலையில் வாகனங்களில் பயணிப்போர் கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையும் குறுகலாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் கடும் வாகன போக்குவரத்து ஏற்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும். என்.சித்ரா, பம்மல்.
தெரு விளக்குகள் எரியவில்லை
மாநகராட்சியின் 83-வது வார்டு, கொரட்டூர் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் திருட்டு நடக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அப்பகுதியில் தெருவிளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.சுந்தரதோளுடையான், கொரட்டூர்.
புழுதி பறக்கும் சாலையால் அவதி
குன்றத்தூரில் இருந்து அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் வரை செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளது. அதனால் வாகன விபத்துகள் ஏற்படுவதுடன், சாலையோர உணவகங்களில் தூசு படிந்து, உணவு பாழாகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். ஜி.முகமது நிசார், குன்றத்தூர்.
ஆபத்தான நிலையில் கால்வாய்
பட்டாளம் பகுதியில், ஸ்டீபன்சன் சாலையில் திறந்த நிலையில் கால்வாய் உள்ளது. அங்கு தடுப்புச் சுவரும் எதுவும் எழுப்பப்படவில்லை. அதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு தடுப்புச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.தட்சிணாமூர்த்தி, ஜவகர்நகர்.
பழுதான போக்குவரத்து சிக்னல்
ராமாபுரம் போக்குவரத்து சிக்னல் மழை வெள்ளத்துக்கு பிறகு செயல்படவில்லை. அங்கு போக்குவரத்து காவலரும் இல்லை. இரவு நேரங்களில் இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இங்கு சாலையை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. அதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே பழுதான போக்குவரத்து சிக்னலை உடனடியாக சரி செய்ய வேண்டும். வாசகர், ராமாபுரம்.
நிறுத்தப்பட்ட பூங்கா பணி
மாநகராட்சியின் 158-வது வார்டில், நந்தம்பாக்கம் பகுதியில் பூங்கா அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்பொழுது என்ன காரணத் தினாலோ தெரியவில்லை பூங்கா அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு அப்பகுதி பூட்டிக் கிடக்கிறது. பொதுமக்கள் அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். எஸ்.பாலசங்கர், நந்தம்பாக்கம்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்