

நெய்வேலி அருகே தனியார் மனைப்பிரிவுகளுக்கு செல்லும் மருங்கூர் ஊராட்சிக்கு சொந்தமான தார் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு மனை உரிமையாளர்கள் 115 பேர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மருங்கூர் கிராமத்தில் கும்பகோணம் - சென்னை 4 வழிச்சாலையில் டேனக்ஸ் பவர் என்ற தனியார் நிறுவனம் ‘எவர்கிரீன் நகர்’ என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக நகர் ஊரமைப்புத்
துறையின் அங்கீகாரம் மற்றும் பொதுப்பாதை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான இடத்தை ஊராட்சி
மன்றத்துக்கு தானமாக வழங்கி, சுமார் 115 வீட்டுமனைகளை இந்நிறுவனம் விற்றுள்ளது.
மெயின்ரோட்டில் இருந்து எவர்கிரீன் நகர் மனைப்பிரிவுகளுக்கு செல்லவிஜயநகர் என்ற மற்றொரு வீட்டு மனைப்பிரிவின் பொதுப்பாதை வழியாக செல்ல வேண்டும். இந்த 30 அடிஅகலமுள்ள தார்சாலையை இணைப்பு அணுகுசாலையாக பயன்படுத்திக் கொள்ள நகர் ஊரமைப்புத் துறை அங்கீகாரமும், அனுமதியும் வழங்கியுள்ளது. இந்த தார்சாலை மருங்கூர் ஊராட்சிக்கு சொந்தமானது. இந்நிலையில் டேனக்ஸ் பவர் நிறுவன இயக்குநர்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப் பிரச்சினை தொடர்பாக கடன்வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி மிரட்டிய ஒரு கும்பல் திடீரென கடந்த ஜூலை 21 அன்று அடியாட்களுடன் வந்து எவர்கிரீன் நகருக்கு செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான தார்சாலையின் குறுக்கே 30 அடி அகலம், 6 அடி உயரத்துக்கு தடுப்புச்
சுவர் எழுப்பியுள்ளதாக எவர்கிரீன் நகர் தரப்பில் நரேந்திரன் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இருதரப்பிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க போலீஸாரும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் அதன்பிறகும் தடுப்புச்சுவர் இடிக்கப்படவில்லை என்பதாலும்,எவர்கிரீன் நகரில் வீட்டுமனைகளை வாங்கியுள்ள மனை உரிமையாளர்கள் 115 பேர் மற்றும் அதன் ப்ரோ மோட்டரான விஸ்வநாதன் ஆகியோர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்பி
உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதாலும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அதில், ‘‘தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த அரங்கநாதன், பாக்கியராஜ், செல்வராஜ் ஆகியோர் அடியாட்களுடன் வந்து எவர்கிரீன் நகருக்கு வரும் ஊராட்சி பொதுப்பாதையை மறித்து தடுப்புச்சுவரை அமைத்துள்ளனர். அரசு தரப்பு ஆவணங்களில் அது ஊராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதை என தெளிவாக உள்ளது. ஆனால் பாதையின் ஒருபகுதியை வாங்கியுள்ளதாக கூறி
சார்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் தடுப்புச்சுவரை பார்வையிட்டு இடிக்க முற்படும்போது, எங்கிருந்தோ வரும் அரசியல் அழுத்தம் காரணமாக இடிக்காமல் சென்றுவிடுகின்றனர். இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த விசாரணையில் தடுப்புச்சுவர் எழுப்பியவர்கள் தரப்பில் எந்தவொரு சட்டப்பூர்வ ஆவ
ணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
தடுப்புச்சுவர் எழுப்பியவர்கள் பண்ருட்டி எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் என்று மிரட்டுவதால் போலீஸாரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பொதுமக்களின் நலன் கருதி தடுப்புச்சுவரை இடித்து
பொதுப்பாதையை மீட்டுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனர்.
இந்த தடுப்புச்சுவர் குறித்து பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, அந்த பாதை ஊராட்சிக்கு சொந்தமானது. இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்புக்கும் அவகாசம்வழங்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு
வார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றார்.
தடுப்புச்சுவர் எழுப்பியதாக புகார்சுமத்தப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அரங்கநாதனிடம் கேட்டபோது, இந்த வீட்டுமனைப் பிரிவுக்கு முறைகேடாக அங்கீகாரம் பெற்றுள்ளனர். சர்வே எண்களை மாற்றி வீட்டுமனைகளை விற்பனை செய்துள்ளனர். இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். நீதிமன்ற முடிவுபடி செயல்படுவோம் என்றார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் நம்மிடம், இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
எவர்கிரீன் நகரில் வீட்டுமனைகளை வாங்கியிருக்கும் உதயக்குமார், ராஜாஆகியோர் கூறுகையில், இங்கு எந்தபிரச்சினையும் இல்லை என்பதால்தான் வீட்டுமனைகளை வாங்கி உள்ளோம்.
ஆனால் இப்போது பொதுப்பாதையைஅடைத்து தடுப்புச்சுவர் கட்டியுள்ளதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். செப்.10 அன்று இந்த நகரில்புதுமனை புகுவிழா நடக்க உள்ளது.அதற்குள் இந்த தடுப்புச்சுவரைஅதிகாரிகள் அகற்றித் தர வேண்டும் என்றனர்.
ஆக்கிரமிப்பின் புது வடிவம்
பொதுப்பாதையின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பி அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புகார் குறித்து இந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோ கூறும்போது, “முன்பெல்லாம் காலி இடத்தில் குடிசை போட்டு ஆக்கிரமிப்பில் ஈடுபடுவார்கள். இப்போது பொதுப்பாதையை ஆக்கிரமித்து பணம் பறிப்பதுதான் நில ஆக்கிரமிப்பின் புதுவடிவமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் ஒதுக்கப்பட்ட பொதுப்பாதை, பூங்காக்கள் பிரதான நுழைவாயில்களை உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கின்றனர். இதனால், அப்பாவி பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே திமுகவினர் மீது நில ஆக்கிரமிப்பு புகார் கூறியபோது, ‘ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம்’ என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இப்போது கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ஆட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு இதுபோன்ற புகார்கள் குவிந்தவண்ணம் இருப்பதால், மக்களின் நலன்கருதி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருந்தும் வகையில் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.