Last Updated : 01 Sep, 2021 03:16 AM

 

Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

வனப்பகுதிகளில் 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழப்பு: பாதுகாப்பை பலப்படுத்துமா உடுமலை வனத்துறை?

உடுமலை வனப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், யானைகள் பாதுகாப்பில் வனத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சூழல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலையில் கரட்டுர் சடையன்பாறை வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின் சடலத்தில் இருந்த தந்தத்தை மர்மநபர்கள் வெட்டி, கடத்திச் சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையின்போது, யானையின் உடலில் இருந்து பால்ரஸ் குண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் உடுமலை வனப்பகுதியில் 32 யானைகள் உயிரிழந்துள்ளது, தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் கூறும்போது, ‘‘சில நாட்களுக்கு முன் உயிரிழந்த யானையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப்பிறகு வேட்டைக் கும்பலால் யானைத் தந்தம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் உதவியில்லாமல், இது சாத்தியமில்லை. மர்மநபர்களை பிடிக்க, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 32 யானைகள் உயிரிழந்துள்ளன’’ என்றார்.

மலைவாழ் மக்கள் நல செயற்பாட்டாளர் தனராஜ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘உள்ளூர் மக்களின் பங்கேற்பு இல்லாமல் வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க முடியாது. ஆனால், மலைவாழ் மக்களுக்கு எந்த விதமான அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவில்லை. வன உரிமைச் சட்டம் எதுவுமே நடைமுறைப்படுத்தவில்லை. வனப்பகுதியில் உமி எனும் விஷச்செடி நிரம்பியுள்ளது. இதனை அகற்றும் பணியை 100 நாள் வேலைத் திட்டம் மூலம் பழங்குடி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தற்போது யானை தந்தம் கடத்தப்பட்ட சம்பவத்தில் பழங்குடி மக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. வன உயிரினங்களை பாதுகாப்பதிலும், வனக்குற்றங்களை தடுப்பதிலும் மலைவாழ் மக்கள் பங்கு அதிக அளவில் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x