

பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் 10 முழக்கங்களை முன்வைத்தார். அப்போது அவர் பேசியது: திமுக கனவுகளை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தக்கனவுகள் வெற்றி பெறும் என்று சொல்கிறேன். தமிழகத்தை எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற கனவு தான் இது. அந்த உறுதி முழக்கத்தைச் சொல்கிறேன்.
* இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலம் ஆக்குவோம். இப்போது 21-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தொழில் முதலீடுகளை கொண்டு வந்து இதை சாத்தியமாக்குவோம்.
* அகில இந்திய அளவில் தமிழக இளைஞர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவோம். திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற உறுதியை அளிப்போம்.
* தமிழகம் ஊழலின் உறைவிடமாக உள்ளது. எனவே, லோக் ஆயுக்தா அமைக்கப்படும். அது சுதந்திரமாகச் செயல்படும்.
* திமுக ஆட்சிக்கு வந்ததும் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும். அரசியல் தலையீடு என்பது அதில் இருக்காது.
* திமுக ஆட்சி அமைந்ததும் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும். அரசு அதிகாரிகள் மக்களைத் தேடி வருவார்கள், அரசு அதிகாரிகள் சேவை வழங்கத் தவறினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
* தமிழக நிதி ஆதாரம் படுபாதாளத்துக்குப் போகிறது. கஜானா காலியாகிவிட்டது. தமிழகத்தை நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்றுவோம்.
* வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை காலி என்ற நிலையை மாற்றி, வேலை இருக்கிறது என்று சொல்லும் அளவுக்குத் திமுக ஆட்சியில் மாற்றுவோம்.
* விவசாயிகள் தற்கொலை இந்த ஆட்சியில் நிகழ்கிறது. விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
* குடிநீர் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. குடிநீர் ஆதாரங்களைக் காப்போம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.
* இன்றிலிருந்து 5 ஆண்டுகளில் தமிழகம் வளமும், வாழ்வாதாரமும் பெறக்கூடிய சூழல் உண்டாகும். ஊழல் ஊதாரித்தனம் இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறும்.
தேர்தல் நேரத்தில் ரூ.1000 கொடுத்துவிடலாம் என்று முதல்வர் கனவு காண்கிறார். ஆனால், இந்த முறை அந்தக் கனவு பலிக்காது.
இந்த ஆட்சியில் எல்லாத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுவால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்ததுதான் திமுக ஆட்சி . திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு மாற்றமும் ஏற்றமும் வரும். அடுத்த 5 ஆண்டுகள் நடக்கவுள்ளது திமுக ஆட்சி அல்ல, அது மக்களின் ஆட்சி.
ஊழலற்ற, முன்னேற்றம்மிக்க மாநிலமாக தமிழகம் நிச்சயம் மாறும். யார் வேண்டுமானாலும் பந்தயம் கட்டுங்கள் நாங்கள் செய்துகாட்டுவோம். பொதுவாழ்வில் தூய்மையும், நேர்மையும் அவசியம், அது திமுக ஆட்சியில் இருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.