

செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகளின் விவரம் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செங்கல்பட்டு நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சியுடன் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில், அஞ்சூர், குண்ணவாக்கம், வீராபுரம், தென் மேல்பாக்கம், புலிப்பாக்கம், திம்மாவரம், பழவேலி, ஆலப்பாக்கம், மேலமையூர், வல்லம், ஒழலூர், பட்ரவாக்கம், செட்டிப்புண்ணியம் ஆகிய 14 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.
அதேபோல் தற்போது பேரூராட்சி அந்தஸ்தில் உள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்ட பின் அருகில் உள்ள வண்டலூர், ஊரப்பாக்கம், நெடுங்குன்றம், காரணை புதுச்சேரி, காயரம்பேடு, பெருமாட்டுநல்லூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளும் உடன் இணைகின்றன. இதற்காக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைவதற்கு சம்மதம் என தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மாங்காட்டுடன் சிக்கராயபுரம், மலையம்பாக்கம், பரணிபுத்தூர், மௌலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் கொழுமணிவாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன. அதேபோல் குன்றத்தூருடன் கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பெரியபணிச்சேரி, கோவூர், கொல்லச்சேரி, தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, காவனூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பழந்தண்டலம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நேற்று ஊரகப் பகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிகளில் இணையும் ஊரக பகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுமா? இணைத்த பின்பு தேர்தல் நடைபெறுமா? அல்லது தேர்தலுக்குப்பின் இணைக்கப்படுமா? என்ற கேள்வி அரசியல் கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறும்போது, "கிராம ஊராட்சிகளை கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் மற்றும் செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க சம்மதம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஓரிரு தினங்களில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும். தேர்தல் நடைபெறுவது குறித்து அரசு தான் முடிவு செய்யும்" என்றனர்.