

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மதிமுக மாவட்டச் செயலாளர் என். செல்வராகவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
தேர்தல் வரை மக்கள் நலக் கூட்டணி நீடிக்காது என்று சொன்னவர்களை மனநல மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும். நாங்கள் தான் ஜெயிக்கப் போகிறோம். திமுக, அதிமுக ஆட்சியில் விவசாயிகள் வேட்டையாடப்பட்டனர். 29 ஆண்டுகள் திமுகவில் இருந்ததால் பேசுகிறேன். அத்தனை தொண்டர்களின் தியாகமும் அங்கு வீணாகி விட்டது. நான்குபேர் பேசும் இயக்கமாக திமுகவை கொண்டுவந்து விட்டீர்கள். உங்கள் மகனை கட்சியில் பொருளாளர் ஆக்கலாம். முதல்வராக்க ஆசைப்படலாமா. மக்களோடு மக்களாக இருந்து பாடுபடுகிறவர்கள் நாங்கள். தமிழகத்தில் 82.5 சதவீத விவசாயிகள் கடனில் தவிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம். மதுவிலக்கை வலியுறுத்தி கட்சிக்கு அப்பாற்பட்டு நடை பயணம் சென்றேன்.
மதுவிலக்கை அறிவித்தால் கள்ளச்சாராயம் வந்துவிடும் என்கிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். அப்புறம் எதற்கு காவல் நிலையங்கள் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம். தாதுமணல் கொள்ளைக்கு துணை போன முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில்,
தமிழர் நலனை பாதுகாக்க வேறு வழியை உருவாக்க ஏற்படுத்தப்பட்டதுதான் மக்கள் நலக் கூட்டணி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல், மதுவை ஒழிப்போம் என உறுதியாகக் கூறுகிறோம் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: 47 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்களை வளப்படுத்திக் கொண்டனர். திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் வந்த மதிமுக, அம்பேத்கரை அடியொட்டி வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, காரல்மார்க்ஸ் வழியில் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து வண்ணக் கலவையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. தமிழக அரசியலை திமுக, அதிமுகவினர் சீரழித்துவிட்டனர். தமிழகம் ஊழலின் உறைவிடமாக உள்ளது என மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அவரது தந்தையையும் சேர்த்துத்தான் சொல்கிறாரா. அவரது உறவினர்கள் மீதும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலூரில் கிரானைட் ஊழல் 20 ஆண்டுகளாக நடந்துள்ளதாக சகாயத்தின் அறிக்கை கூறுகிறது. இந்த ஊழலில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் பங்குண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.சந்தானம், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.