

தென் தமிழகத்தில் முதல் முறை யாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரு பெண் பட்டதாரிகளுக்கு திருநம்பிகளாக மாறும் பாலின மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல்படி மூன்றாம் பாலி னத்தோருக்கான (திருநங்கை, திருநம்பி) பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப்பிரிவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சைக்கான புற நோயாளிகள் பிரிவு அறை எண் 4-ல் வியாழன்தோறும் காலை 10 முதல் மதியம் 12 மணி வரை இயங்குகிறது.
திருநெல்வேலி, மதுரையை சேர்ந்த இளம்பெண்களான 24 வயது எம்காம் பட்டதாரி மற்றும் 21 வயது பிகாம் பட்டதாரி ஆகியோர் தோற்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருநம்பியாக (Trans male) வாழ்ந்தனர். இவர்களுக்கு சிறப்பு மருத்துவக்குழு ஒருங் கிணைப்பாளர் அகச்சுரப்பியல் துறைத் தலைவர் டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த ஓராண்டுக்கு மேலாக உளவியல் ஆலோச னையுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஹார்மோன் சிகிச்சையை மேற் கொண்டனர்.
பின்னர் டீன் ரத்தினவேல் தலை மையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறைத் தலைவர் சுமதி, உதவிப் பேராசிரியர்கள் ஜெயந்த் பிரசாத், கிருஷ்ணவேணி, மயக்கவியல் துறை பேராசிரியர் பாப்பையா, சிறுநீரக அறுவைசிகிச்சை துறைத் தலைவர் மணிமாறன், மனநலத் துறைத் தலைவர் குமணன், டாக்டர் சுதர்சன் குழுவினரால் பெண்ணில் இருந்து ஆணாக மாற விரும்பும் பாலின மாற்று அறுவைசிகிச்சையான கர்ப் பப்பை, கருமுட்டை நீக்குதல் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இது தென் தமிழகத்திலே முதல் முறையாகும்.
அறுவைசிகிச்சைக்குப் பின் இருவரும் உடல், மனதளவில் நன்றாக உள்ளனர்.
மருத்துவமனை டீன் ரத்தி னவேலு நலம் விசாரித்து அறுவை சிகிச்சை குழுவினரையும், அதற்கு உறுதுணையாக இருந்த மருத் துவக்குழு உறுப்பினர்கள் அனை வரையும் பாராட்டினார்.
சிகிச்சைக்கு மேலும் 47 பேர் தயார்
திருநங்கை-திருநம்பி சிறப்பு மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீதர் கூறுகையில், இதுவரை 37 திருநங்கை-திருநம்பிகள் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு முந்தைய உளவியல் மற்றும் ஹார்மோன் சிகிச்சையில் உள்ளனர். 10 பேர் அறுவை சிகிச்சைக்குத் தயாராக உள்ளனர். வரும் காலங்களில் செயற்கை மார்பகம் பொருத்துதல், செயற்கை ஆணுறுப்பு பொருத்துதல், குரல் மாற்றும் அறுவைசிகிச்சை, லேசர் மூலம் தேவையற்ற முடி நீக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன, என்றார்.