

தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுகிறார் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.
திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சி முரளிக்களத்தில் சுகாதாரத் துறை சார்பில் ரூ.25லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் அவர் பங்கேற்றார். பிறகு திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புத் துறை சார்பில் கரோனாவால் தாய், தந்தையை இழந்த 13 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கினார். அப்போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை மிக மோசமாக இருந்தது. அதனால் ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்திருந்தனர். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதன்படி சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி, மானாமதுரை நகராட்சி, சிவகங்கையில் சிப்காட் தொழில் பூங்கா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிவகங்கைக்கு சட்டக் கல்லூரி போன்ற மற்ற வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
எனது மகன், மருமகள் மருத்து வர்களாக உள்ளனர். அதனால் எனது குடும்பத்தைப் பற்றி கவலை இல்லை. தொகுதி மக்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். உங்களால் நான்; உங்களுக்காக நான் என்பது போல் வாழ்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உணவுக் கழிவு மூலம் மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராமத்தை பிரதமர் பாராட்டியதன் மூலம் இந்திய அளவில் ஊரக வளர்ச்சித் துறை சிறப்பாக செயல்படுவதை அறிய முடிகிறது. குப்பைகள்அள்ளாத கிராமங்கள் இருப்பின் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.