

மதுரையில் ரூ. 544 கோடியில் நடைபெறும் புதுநத்தம் சாலை பறக்கும் பால கட்டுமானப் பணி கடந்த 3 ஆண்டுகளாக சர்வீஸ் சாலை அமைக்காலேயே நடந்து வருகிறது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் மக்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து நத்தத்துக்கு ரூ. 1,020 கோடியில் 28 கி.மீ. தொலை வுக்கு புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே செட்டிக்குளம் வரை பறக்கும் பாலம் ரூ.7.3 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படுகிறது.
இந்த பறக்கும் பாலம் முழுவதும் மாநகர் பகுதியிலேயே அமைகிறது. அதனால், நகர் பகுதி மட்டுமில்லாது புறநகர் பகுதி மக்கள் கார்கள், இரு சக்கர வாகனங்களில் 24 மணி நேரமும் வந்து செல்கின்றனர். கனரக வாகனங்கள், பஸ்கள், கார்களும் அதிகளவு வந்து செல்வதால் பறக்கும் பால பணி நடந்தாலும் புது நத்தம் சாலையில் வாகனப் போக்குவரத்து எப்போதும் அதிகமாகவே இருக்கிறது.
புதிய சாலை, பாலங்கள் கட்டுமானப் பணி நடக்கும்போது, அதன் அருகில் சர்வீஸ் சாலையை அமைத்த பிறகே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆனால், நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த புது நத்தம் சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக சர்வீஸ் சாலை அமைக்காமலேயே பறக் கும் பால கட்டுமானப்பணி நடக்கிறது.
கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் ஒதுக்குப்புறமாக பஸ், கார், இரு சக்கர வாகனங்கள் செல்ல தற்காலிகமாக மண் சாலை அமைத்துள்ளனர். சில இடங்களில் அதுவும் இல்லை. அதனால் மழைக்காலங்களில் இந்தச் சாலையில் தெப்பம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடைக்காலத்தில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக புழுதிக் காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் சுலபமாகக் கடந்து செல்ல முடியவில்லை.
மேலும் பாலப் பணிக்காக பல இடங்களில் மண்ணைத் தோண்டி சரியாக மூடாமல் உள்ளதால் சாலையோரக் கட்டிடங்கள், வீடுகள் பாழாகி விட்டன.
சில சமயங்களில் கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் வாகனங்கள் செல்லக் கூட வழிவிடாமல் அவசரக் கோலத்தில் பணியை செய்கின்றனர். அதனால், வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் நேரில் களம் இறங்கி வழியை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மேலும் இந்த சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு தேய்மானம் அதிமாகி அடிக்கடி பழுதாகின்றன.
ஆட்டோ, பஸ், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. மேலும் இணைப்புச்சாலை இன்றி இதுநாள் வரை அச்சத்துடனேயே மக்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தால், தற்போது இந்தச் சாலையில் பயணிக்கவே மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தற்போது பால விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் விசாரணையைத் தொடங்கி உள்ளார். ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகளிடம் விசாரிக்க உள்ள நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மேம்பாலப் பணி நடக்கும் என்பது தெரியாததால் சர்வீஸ் சாலையை அமைத்தபிறகே மீண்டும் பாலப் பணிகளை தொடங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.