

மின்வெட்டுப் பிரச்சினையை சமாளிக்க தேனி மாவட்ட விவசாயிகள் சோலாருக்கு மாறி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள் இத்தொழிலையை நம்பி உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேனி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்தது. இதன் காரணமாக வயல்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
மேலும் கருகிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் லாரி, டிராக்டர், ஜீப் போன்ற வாகனங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தினர். இதே நிலை நீடித்தால் விவசாயத் தொழில் நசிந்து விடும் என்பதை உணர்ந்த சில விவசாயிகள் மாற்று ஏற்பாடாக குஜராத் தொழில்நுட்பத்துடன் கூடிய சோலார் சிஸ்டத்துக்கு மாறினர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் குச்சனூர் விவசாயி சிவக்குமார் கூறுகையில், கம்பம், கூடலூர், சின்னமனூர், ராமபுரம், பாலகோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சோலாருக்கு மாறி வருகின்றனர். 8 முதல் 9 மணி நேரம் வரை கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து 7 ஹெச்பி மின்மோட்டாரை இயக்கக் கூடிய சக்தி உடைய சோலார் சிஸ்டத்தினை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.
கோடை காலம் நெருங்கி கொண்டிருப்பதால் மின் வெட்டு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மற்ற விவசாயிகளும் சோலாருக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சோலார் அமைக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது என்றார்.