Published : 04 Jun 2014 12:06 PM
Last Updated : 04 Jun 2014 12:06 PM

மாற்றுத் ‘திறமைசாலிகளை’ வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஏகலைவன்: அயராத சேவைக்காக 28 விருதுகள்

‘‘இத்தனை நாளும் தனி மனிதனாக வாழ்ந்துவிட்டேன். இப்போதுதான் சமுதாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறேன்’’ - அழகாய்ச் சொன்னார் மாற்றுத் திறனாளி ஏகலைவன்.

மாற்றுத் திறனாளிகளின் திறமைகளைக் கண்டுபிடித்து அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் இவரது வேலை. மாற்றுத் திறனாளிகளுக்காக 6-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் ஏகலைவன், ஒரு விபத்தில் இடது காலை இழந்தவர். அதன் பிறகும், மனதைத் தளர விடாமல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த கதையை விவரிக்கிறார்..

‘‘கருவில் இருக்கும்போதே என்னைக் கரைத்துவிட முயற்சி நடந்தது. அம்மா சிறுவயதில் கர்ப்பமானதால் எனக்கு முன்பு 2 முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். மூன்றாவதாக என்னையும் கலைக்க ஊசிகூட போட்டுவிட்டார்கள். இன்னும் ஒரு ஊசி போட்டிருந்தால் அதுவும் நடந்திருக்கும். ஆனால், ‘தலை பெரிதாகிவிட்டது. இனி கலைக்க முடியாது’ என்று சொன்னதால் பிழைத்தேன்.

பிறந்து ஆறே மாதத்தில் இன்னொரு கண்டம். மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 24 மணி நேரம் கெடுவைத்துப் பிழைத்தேன். 13-வது வயதில் பிறந்த நாளின் போது நண்பர்களோடு சேர்ந்து தண்ட வாளத்தை தாண்டப் போய் ரயிலில் அடிபட்டதில்தான் இடது கால் போய்விட்டது. 2 வருடம் சிகிச்சை யளித்துக் காப்பாற்றினார்கள்.

‘சாதிக்கப் பிறந்தவன்’

3 முறை செத்துப் பிழைத்திருக் கிறோம் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கு. நான் சாதிக்கப் பிறந்தவன்னு உணர ஆரம்பித்தேன். அப்பா, சென்னை அண்ணா நகரில் பிளாட்பாரத்தில் செருப்புக்கடை வைத்திருந்தார். நான் ரங்கநாதன் தெருவில் டெய்லர் கடையில் வேலை பார்த்தேன். அந்த நேரத்தில்தான் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். தமிழகத்தில் 30 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பல துறைகளில் திறமை கொண்டவர்கள். ஆனால், ஏனோ தங்களது திறமைகளை நான்கு சுவருக்குள்ளேயே முடக்கிவிட்டார்கள். இவர்கள் மீது மீடியாக்களின் பார்வையோ, வெகுஜன வெளிச்சமோ படுவதில்லை.

‘உதவிக்கரம்’ நீட்டி..

இதை மாற்ற வேண்டும். அவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக மாற்றுத் திறன் திறமையாளர்களை தேடிக் கண்டுபிடித்து பேட்டி எடுத்து ‘உதவிக்கரம்’ என்ற பத்திரிகையில் எழுதினேன்.

2004-ல் ‘பயண வழி பூக்கள்’ என்ற எனது முதல் நூல் வெளியானது. ‘சாதனை படைக்கும் ஊனமுற்றோர்கள்’ என்ற தலைப்பில் 2 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டேன். நாம் ஒரு அடி முன்னே எடுத்துவைத்தால் உலகம் நம் அருகில் வந்து நிற்கும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தேன்.

28 விருதுகள்

அப்பாவும் அம்மாவும் சொந்த ஊருக்குப் போய் செட்டிலாக விரும்பியதால் 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்துக்கு வந்துவிட்டோம். இங்கு வந்த பிறகு, எழுத்துப் பணியோடு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய ‘நம்பிக்கை வாசல்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கினோம். இயலாத நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நல் இதயம் கொண்ட அன்பர்களின் உதவியோடு பல நல்ல காரியங்களை செய்து கொடுக்கிறோம். என் சேவையைப் பாராட்டி இதுவரை 28 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் வீட்டுக் குழந்தைகளின் படிப்புத் தேவைகளுக்கு எங்களால் முடிந்த அளவு உதவுகிறோம். தகுந்த ஆலோசனைகளும் வழங்குகிறோம்.

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு தொழிற்பயிற்சி மையம் உருவாக்கி, அங்கு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இப்போது வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

எதிர்காலத் திட்டத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புடனும் அதற்கேற்ற உத்வேகத்துடனும் நம்பிக்கையோடு சொன்னார் ஏகலைவன்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x