

வரும் சட்டப்பேரவை தேர்தல் மூலம் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
சேலம் போஸ் மைதானத்தில் மதிமுக சார்பில் மாற்று அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோபால் ராஜா வரவேற்றார்.
மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிய உரிமையில், உங்களை நீதிபதிகளாக நினைத்து, உங்கள் மத்தியில் பேச வந்துள்ளேன்.
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியில், ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழகத்தில் வாழ்வாதாரத்தை அழித்து விட்டது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு வந்த ஆபத்தை நீக்காமல் மத்திய அரசு துரோகம் செய்கிறது.
ஆற்று மணல், தாது மணல் கொள்ளை ரூ.60 ஆயிரம் கோடி அளவு முறைகேடு நடைபெற்றதாக அறிக்கைகள் கூறுகின்றன. கிரானைட் கொள்ளை குறித்த சகாயத்தின் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து எவரும் கேள்வி கேட்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், மது முற்றிலுமாக ஒழிக்கப்படும். இதுவரை ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுவதும், மக்கள் சொத்துக்களாக மாற்றப்படும். சுற்றுச்சூழல், நதிகளைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையின் கொட்டத்தை அடக்கி, மீனவர்கள் நலன் காக்கப்படும்.
தமிழகத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்கள் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கின்றனர். தமிழகத்தில் இளைஞர்கள், நடுநிலை யாளர்கள் உள்ளிட்டவர்களால் மட்டுமே திருப்புமுனையை ஏற்படுத்திட முடியும். வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில், மக்கள் நலக்கூட்டணிக்கு வாய்ப்பளித்து, நீங்கள் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.