அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பிரம்மாண்டமாகச் செயல்படும்: சி.வி.சண்முகம் பேட்டி

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
Updated on
2 min read

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்குத் துணைவேந்தர் நியமிக்கப்பட்டு அன்பழகன் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால் பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது.

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று காலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தன்னந்தனியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை விழுப்புரம் மேற்கு போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைக்குப் பின் அவர் மண்டப வாசலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''விழுப்புரம் மாவட்டம் கல்வியில் பின்தங்கி உள்ளதால் அதிமுக அரசு இங்கே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, சட்டக் கல்லூரி, மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டில் நான் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் பல்கலைக்கழகம் தொடங்கத் தொடர்ந்து போராடி கடந்த ஆட்சியில் விழுப்புரம், கடலூர் மாவட்ட மாணவர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி பயில ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

சட்டம் கொண்டு வந்து, துணைவேந்தர் நியமித்தார்கள். வேறு எதுவும் செய்யவில்லை என்று உயர் கல்வித்துறை அமைச்சர் சொல்கிறார். ஒரு பொய்யைத் தொடர்ந்து சொல்லிவந்தால் அது உண்மையாகி விடாது. இச்சட்டம் இயற்றி 4 மாதமாகிறது. ஆளுநர் பிப்ரவரி 25-ம் தேதி ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அன்று மாலை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால் பொன்முடி கோயபல்ஸ் பொய்யைச் சொல்லி வருகிறார். தேர்தல் அறிவிப்பு இன்னும் 10 நாட்கள் தாமதமாகி இருந்தால் இவர்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை. பல்கலைக்கழகம் செயல்பட்டிருக்கும்.

இன்று எங்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று பொன்முடி சவால் விடுகிறார். விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி சாலையில் ஆவின் வளாகத்தில் நிர்வாக அலுவலகம் செயல்பட 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகம் செயல்பட வளவனூர் அருகே செங்காடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிகச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. என்னோடு வாருங்கள் காட்டுகிறேன்.

மக்கள் விரோத அரசு

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடர் நடவடிக்கை. அதை எந்த அரசு செய்தால் என்ன? திமுக ஆட்சியில் திருவெண்ணைய்நல்லூரில் அறிவிக்கப்பட்ட கலைக் கல்லூரியை அதிமுக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் விரோத அரசாகச் செயல்பட்டு வருகிறது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை, மனமில்லை. அதிமுக அரசின் திட்டங்களை இந்த அரசு முடக்கி வைத்துள்ளது. இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.

திமுக அரசுதான் 2006- 2011 திமுக ஆட்சியில் முண்டியம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கியதும் விழுப்புரம் நகரில் இருந்த தலைமை அரசு மருத்துவமனையை மூடினார்கள். இதனைத் தொடர்ந்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்றார்கள். ஆனால், அடுத்து வந்த அதிமுக அரசு மூடப்பட்ட மருத்துவமனையைத் தொடர்ந்து செயல்பட வைத்தது. அப்போது எப்படி சட்டத்தில் இடமிருந்தது?

சென்னைக்கு அடுத்து விழுப்புரம் நகரத்தில் டைடல் பார்க் அமையவேண்டும் என முதல்வரிடம் சொல்லி மருத்துவமனை வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனை மூடி, வானூர் அருகே கொண்டு சென்றுள்ளார். டைடல் பார்க் அங்கு சென்றால் புதுச்சேரியில் உள்ளவர்களுக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நான் அமைச்சராக இருந்தபோது புதுச்சேரிக்கு அருகே அமைக்கவேண்டும் என்றபோது நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். ஆனால் பொன்முடிக்கும், ஸ்டாலினுக்கும் விழுப்புரம் மாவட்ட மக்கள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.

நாங்கள் சவால் விடுகிறோம். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பிரம்மாண்டமாகச் செயல்படும்''.

இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in