Published : 31 Aug 2021 07:11 PM
Last Updated : 31 Aug 2021 07:11 PM

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்: மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு எதிர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஆக. 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் இன்று புதுடெல்லியில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தின் கூட்ட அரங்கில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன், காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் தொடக்கத்திலேயே மேகதாது குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என, தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவின் மேகதாது அணை குறித்த டி.பி.ஆர் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதனால் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது எனவும், மேகதாது விவகாரத்தில் நான்கு மாநிலங்களும் சம்மதித்தால் மட்டுமே விவாதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தவிர்த்தது.

மேலும், தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இம்மாதம் வரை 86.380 டி.எம்.சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், 30.8.2021 வரை 57.042 டி.எம்.சி நீரை மட்டுமே வழங்கியுள்ளது. இன்னும், 27.86 டி.எம்.சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்காமல் இருக்கவும், சம்பா பயிர் செய்யவும் நிலுவையில் உள்ள நீரைக் கர்நாடகா உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீர்ப் பங்கீட்டை கர்நாடகா அரசு தமிழகத்திற்குத் தர வேண்டும் என வாதாடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட கர்நாடக அதிகாரிகள், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகக் கூட காவிரியில் சுமார் 14 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். 30.8.2021 வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள 27.86 டிஎம்சி நீரையும் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் உரிய காலத்துக்குள் தமிழகத்துக்கு வழங்கிட வேண்டும் என்று, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் அடுத்த 14-வது கூட்டம் செப்டம்பர் 24-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 'தமிழகத்துக்கு கர்நாடகா குறைந்த அளவே நீர் வழங்கியுள்ளதாகவும், குறுவை மற்றும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக நிலுவையில் வழங்க வேண்டிய தண்ணீரையும், செப்டம்பர் மாதத்துக்கு வழங்கவேண்டிய தண்ணீரையும் வழங்க வேண்டும் எனவும் தமிழக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் வரை 86.38 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் 30.8.2021 வரை 57.04 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, நிலுவையிலுள்ள 27.86 டி.எம்.சி தண்ணீரையும், செப்டம்பர் மாதத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் உடனே வழங்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர்களும் செப்டம்பர் இறுதிக்குள் வழங்குவதாகக் கூறியுள்ளார்கள்.

தற்போது கர்நாடகா அணைகளில் 209 டி.எம்.சி நீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 156 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ளது. எனவே, இது 25 சதவீதம் பற்றாக்குறை ஆகும். எனவேதான் உரிய அளவு நீரைத் தமிழகத்திற்கு வழங்க முடியவில்லை என, கர்நாடகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் மேகதாது பொருள் குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தது. இப்பொருள் குறித்து விவாதம் தவிர்க்கப்பட்டது. நான்கு மாநிலங்களுடன் விவாதித்துதான் முடிவெடுக்கப்படும். அணைக்கட்டு விவகாரம் தொடர்பாக காவிரி கீழ்ப்பாசன வசதி பெறும் மாநிலங்களின் அனுமதி கட்டாயம் தேவை' எனத் தெரிவித்தார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x