

எம்.சேண்ட் தயாரிப்புத் தொழிலை முறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட 9 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை (சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தன் வசம் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறையின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்:
1. பயனற்ற பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளைப் பொதுமக்களுக்குப் பயனுள்ள அமைப்புகளாக மாற்றுதல்.
2. விதிமுறைகளுக்குப் புறம்பாக கனிமங்கள் எடுப்பதைத் தடுக்க ஆளில்லா சிறிய ரக விமானத்தைப் பயன்படுத்துதல்.
3. குவாரிப் பணிகளில் இருந்து வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்.
4. எம்.சேண்ட் தயாரிப்புத் தொழிலை முறைப்படுத்த ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும்.
5. பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்படாமல் குவாரி பகுதியிலேயே மலை போல் குவிந்து கிடக்கும் கிரானைட் கழிவுக் கற்களை அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில், பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
6. அதிக செறிவூட்டப்பட்ட கிராபைட் தயாரிக்க தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.
7. தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் ஆலையின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.
8. ஜிப்சம் கனிம இருப்புப் பகுதிகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.
9. நவீன நில அளவைக் கருவி கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு துரைமுருகன் அறிவிப்புகளை வெளியிட்டார்.