ரேஷன் ஊழியர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரிய வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ரேஷன் ஊழியர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரிய வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

ரேஷன் கடை விற்பனையாளர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரிய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேவகோட்டையைச் சேர்ந்த எஸ்.சுரேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''எழுவன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1998-ல் எழுத்தராக நியமிக்கப்பட்டேன். 2008-ல் எழுவன்கோட்டை ரேஷன் கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டேன். பல்வேறு குற்றச்சாட்டுகளால் 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். பின்னர் என்னைப் பணி நீக்கம் செய்து கூட்டுறவு வங்கி சிறப்பு அலுவலர் 9.9.2010-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் சீராய்வு மனுத்தாக்கல் செய்தேன். அவர் என் கோரிக்கையை நிராகரித்து சிறப்பு அலுவலரின் உத்தரவை உறுதி செய்து 31.5.2012-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பிறப்பித்த உத்தரவு:

''ரேஷன் கடைகள் வழியாகப் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வழங்கும் பணியில் மனுதாரர் ஈடுபட்டுள்ளார். அந்தப் பொருட்களை மக்களுக்குத் தாமதம் இல்லாமல் வழங்கினால்தான் பொது விநியோகத் திட்டம் வெற்றி பெறும். இப்பணியில் மனுதாரர் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரிந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் ரேஷன் பொருட்களைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்காமல் தனி நபர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்துள்ளார். இது பொது விநியோகத் திட்டத்துக்கு முரணானது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது பணி நீக்கம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in