உரிமம் இல்லாத கல்குவாரிகள் செயல்பட அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

உரிமம் இல்லாத கல்குவாரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுக்கா, மொரட்டுப்பாளையம் கிராமத்தில், நிபந்தனைகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் இன்று (ஆக. 31) விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உரிமம் இல்லாமல் ஏராளமான குவாரிகள் இயங்கி வருவதாகவும், தங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் இயங்கும் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் அசோக்குமாரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மூன்று நாட்கள் ஆய்வு நடத்தி, வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், அந்தப் பகுதியில் 64 குவாரிகள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாகவும், உரிமம் பெற்றுள்ள 24 குவாரிகளில், 18 குவாரிகள் நிபந்தனைகளை மீறிச் செயல்படுவதாகவும் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையைப் படித்த நீதிபதி, குவாரிகளை அவ்வப்போதைக்கு ஆய்வு செய்யாததால் நிர்வாகத்துக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, உரிமம் இல்லாமல் செயல்படும் 64 குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த குவாரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அவற்றைச் செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், வருவாய் இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஒரே பதிவு எண்ணைக் கொண்ட கனரக வாகனம் மட்டும் பயன்படுத்தப்பட்டதால், அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், விதிமீறிச் செயல்படும் உரிமம் பெற்ற குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in