சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில்: உரிய முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் 2000-ம் ஆண்டு தமிழக அரசு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டதாகவும், இதற்கிடையில் மீன்பிடித் தடைக் காலத்தை மறு ஆய்வு செய்யவும், மீன் வளத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்தது.

2014-ம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டதாகவும், ஆனால், தமிழகத்தில் இந்த உத்தரவைப் பின்பற்றாததால் தமிழகத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி தமிழக அரசுக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று (ஆக. 31) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் அனுப்பிய பதில் கடிதத்தில், சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்வது தொடர்பாக அரசு உரிய முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்துத் தகுந்த முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in