32 ஆண்டுக்கு முன்பு 31 ரூபாய் முறைகேடு; நடத்துநரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

32 ஆண்டுக்கு முன்பு 31 ரூபாய் முறைகேடு; நடத்துநரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரையில் 32 ஆண்டுக்கு முன்பு அரசுப் பேருந்துப் பயணிகளிடம் பழைய டிக்கெட்டுகளைக் கொடுத்து 31 ரூபாய் முறைகேடு செய்ததாகப் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்தவர் யு.செல்லதுரை. இவர் கடந்த 1989-ல் மதுரை பாலமேட்டிலிருந்து தெப்பக்குளத்துக்கு இயக்கப்பட்ட பேருந்தில் பணிபுரிந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் சோதனை நடத்தியபோது, பல பயணிகளிடம் பழைய டிக்கெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இந்த டிக்கெட்டுகள் இதே பேருந்தில் ஏற்கெனவே பயணம் செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்டன. அந்த டிக்கெட்டுகளை அடுத்த முறை பயணத்தின்போது பயணிகளிடம் வழங்கி பணம் பெற்றதாகக் கூறி செல்லதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி 1991-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் செல்லதுரை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவைத் தொழிலாளர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2001-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி செல்லதுரை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2013-ல் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பிறப்பித்த உத்தரவு:

’’மனுதாரரின் பணப்பையை டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தபோது பழைய டிக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். பயணிகளிடம் பழைய டிக்கெட்டுகளைக் கொடுத்து ரூ.31 பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சோதனையின்போது ஒரு பயணியிடம் 70 பைசா டிக்கெட் இருந்துள்ளது. அந்த டிக்கெட் அதே பேருந்தில் முந்தைய பயணத்தின்போது பயணம் செய்த ஒருவருக்கு வழங்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். தன்னிடம் பழைய டிக்கெட் எப்படி வந்தது என்பதை மனுதாரர் விளக்கவில்லை.

மனுதாரர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை. ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை அதிகாரியும், தொழிலாளர் நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர். முறைகேட்டுத் தொகை மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால், நம்பிக்கையின்மை முக்கியமானது.

மனுதாரர் முந்தைய பயணத்தின்போது பயணிகளுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டை மீண்டும் பயணிகளிடம் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற நடத்தை மீறலைத் தீவிரமாகக் கருத வேண்டும். தொழிலாளர் நீதிமன்றம் மனுதாரர் தரப்பு கருத்துகளை முழுமையாகக் கேட்ட பிறகே, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in