Last Updated : 31 Aug, 2021 03:49 PM

 

Published : 31 Aug 2021 03:49 PM
Last Updated : 31 Aug 2021 03:49 PM

கும்பகோணத்தில் கோயில் இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 16 வீடுகள் அகற்றம்

கும்பகோணத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக அகற்றினர்.

கும்பகோணம் பெருமாண்டி தெற்குத் தெரு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகேஸ்வரன் கோயிலின் இணைக் கோயிலான நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளாக சிலர் கூரை, ஓட்டு வீடுகளைக் கட்டி வசித்து வந்தனர்.

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 16 வீடுகளை உடனடியாக அகற்ற வீட்டின் உரிமையாளர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 12 வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீடுகளை விட்டு ஏற்கெனவே வெளியேறினர். இதில் நான்கு பேர் மட்டும் அங்கிருந்து வெளியேறாமல் இருந்தனர். அந்த நான்கு பேருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் இளையராஜா உத்தரவின் பேரில், அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், கிருஷ்ணகுமார், ஆசைத்தம்பி, கார்த்திகேயன், ஜீவானந்தம், ராஜா ஆகிய அதிகாரிகள் இன்று காலை பெருமாண்டி தெற்குத் தெரு பகுதியில் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 16 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து அங்கு 20,752 சதுர அடி அளவிலான கோயில் இடம் மீட்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளர் விஜயகுமார் மேற்பார்வையில் மின்வாரிய ஊழியர்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின்போது கும்பகோணம் கிழக்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x