

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அதிமுக தலைமை நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் வருகின்ற ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ளது. அதை ஒட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா இம்மாதம் 3-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜெயலலிதா வரும் மார்ச் 11 அன்று சிதம்பரத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
அதன்பிறகு ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் வழியாக சுற்றுப் பயணம் செய்கிறார்.
ஏப்ரல் 1-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் செய்கிற அவர் நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் ஏப்ரல் 17-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார்.
சென்னையின் சுற்றுப்புறத்தில் இருக்கும் தொகுதிகளான அரக்கோணம், திருவள்ளூரில் ஏப்ரல் 19 சனிக்கிழமை அன்று பிரச்சாரம் செய்கிறார்.
தனது கடைசி கட்ட பிரச்சாரத்தை சென்னையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 20, 21 தேதிகளில் செய்கிறார். 20ந் தேதி மத்திய சென்னை, வடசென்னையில் பிரச்சாரம் செய்கிற அவர், ஏப்ரல் 21ந் தேதி தென் சென்னையில் உள்ள ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.