Published : 31 Aug 2021 14:52 pm

Updated : 31 Aug 2021 14:52 pm

 

Published : 31 Aug 2021 02:52 PM
Last Updated : 31 Aug 2021 02:52 PM

முக்கிய துறைகளை தனியார்மயமாக்கி வேலைவாய்ப்புகளை பறிப்பதுதான் மோடி அரசின் திட்டம்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

ks-alagiri-slams-modi-government
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

முக்கிய துறைகளை தனியார்மயமாக்கி, வேலைவாய்ப்புகளை பறிப்பது மோடி அரசின் திட்டம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (ஆக. 31) சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


"மத்திய பாஜக அரசு, மாநில அரசுகளையோ, எதிர்க்கட்சிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக, எதேச்சதிகாரமாக மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் 9 மாதங்களாக விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி இவர்களை சந்தித்து கோரிக்கையை கேட்கத் தயாராக இல்லை. இது மோடியின் சர்வாதிகாரத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

பாஜக அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வரை மனதார பாராட்டுகிறேன். மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகளின் குரலை ஒலிக்கிற வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. ஆனால், மத்திய பாஜக இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர், இதை கடுமையாக எதிர்த்து கருத்து கூறியிருக்கிறார்கள். இதற்கு எதிராக தமிழகத்தில் பரப்புரை செய்யப் போவதாக கூறுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகள் இதுவரை பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தராத, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசுகிற பாஜக, ஒரு விவசாயிகள் விரோத கட்சி என்பதை பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இதுவரை தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று வந்தார்கள். ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், மண்டி விற்பனைக் கூடங்களும் ஒழிக்கப்பட்டு அதானி, அம்பானி கையில் ஒப்படைக்கப்படுகிற அபாயம் பாஜகவின் வேளாண் சட்டங்களால் ஏற்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, ஏற்கெனவே தமிழகம் முழுவதும் ஏர்கலப்பை பேரணி நடத்தி, காங்கிரஸ் கட்சி விழிப்புணர்வு பிரச்சார பரப்புரையை மேற்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் 'மன் கி பாத்' என்னும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 80-வது தொடரில் பிரதமர் மோடி பேசும் போது, சமஸ்கிருத மொழி அறிவை வளர்க்கவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் உதவுவதாகக் கூறி, அனைவரும் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாஜக ஆட்சி வந்தபிறகு, சம்ஸ்கிருத மொழியைப் பரப்புவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மக்கள் பயன்பாட்டில் இல்லாத சம்ஸ்கிருதத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 644 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14,135 பேரும், 2011 கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் அறிந்தவர்களாக, பேசுபவர்களாக இருக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிற சம்ஸ்கிருத மொழிக்கு மற்ற மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட 22 மடங்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 29 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கி, மற்ற மொழிகளை பாஜக அரசு புறக்கணித்திருக்கிறது.

இந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியிலும், பொதுக் கூட்டங்களிலும் திருவள்ளுவர், பாரதியார், ஔவையார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசுகிற பிரதமர் மோடி, சமஸ்கிருதத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டுவது ஏன்? இந்தியா என்பது பல்வேறுபட்ட கலாச்சாரம், மொழி, இனங்களை கொண்ட ஒரு கூட்டமைப்பை கொண்ட நாடாகும்.

இதன்மூலம், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்தியாவின் அடிப்படை தத்துவமாகும். அதை புறக்கணித்து விட்டு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சந்தை, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் ஒற்றை ஆட்சி முறையை, ஒற்றை கலாச்சாரத்தை புகுத்துகிற பிரதமர் மோடியின் சர்வாதிகாரத்தை காங்கிரஸ் கட்சியும், மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் முறியடிக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தை தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதை எதிர்த்தும் குரல் கொடுத்திருக்கிறார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் சொத்துக்கள் பகிரங்கமாக விற்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்று கூறியிருக்கிறார். முக்கிய துறைகளை தனியார்மயமாக்கி, வேலைவாய்ப்புகளை பறிப்பது மோடி அரசின் திட்டமாகும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தனியார்மயத்திற்கு எதிராக இருந்ததில்லை. ஆனால், மன்மோகன் சிங் அரசு விரிவாக விவாதித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தான் தனியார்மய முடிவை எடுத்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையை தனியார்மயமாக்க நாங்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை. எனவே, இந்த திட்டத்தை எதிர்த்து கடுமையான பரப்புரையை தமிழக காங்கிரஸ் விரைவில் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!கே.எஸ்.அழகிரிமத்திய அரசுநரேந்திர மோடிபாஜகநிர்மலா சீதாராமன்Ks alagiriCentral governmentNarendra modiBJPNirmala sitharaman

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x