

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த சபாநாயகருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 4-ம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், பேரவைக்குள் வராமல் கார் வெளியேறியது.
அதனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் தொடங்கியது. பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதையடுத்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் விசாரித்தபோது, "சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை டாக்டர்கள் பரிசோதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல் நிலையைப் பொறுத்தும் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம்" என்றனர்.
சபாநாயகர் செல்வம் ஐசியூவில் உள்ள சூழலில் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. சபைக் காவலர்களே மருத்துவமனை ஐசியூ வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் தரப்பில் விசாரித்தபோது நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை சபாநாயகருக்குத் தரப்படுகிறது என்று குறிப்பிட்டனர்.