Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேடு வெளியீடு: வாக்காளருக்கு பரிசுப் பொருள், உறுதிமொழி அளிக்கக் கூடாது- வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையோ, உறுதிமொழிகளையோ அளிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. மேலும், தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில், தேர்தலுக்கு தயார் நிலையில் அலுவலர்கள் உள்ளனரா எனவும், மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துவேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கையேட்டை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதா வது:

ஒருவர், எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினர் அல்லது தலைவராக போட்டியிட விரும்புகிறாரோ, அந்த ஊராட்சி வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய வார்டுக்கு போட்டியிடுவோர் பெயர், தொடர்புடைய ஒன்றிய வாக்காளர்பட்டியலிலும், மாவட்ட ஊராட்சிவார்டுக்கு போட்டியிடுவோர் பெயர்,தொடர்புடைய மாவட்ட வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

வைப்புத் தொகை விவரம்

வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர், கிராம ஊராட்சிவார்டு உறுப்பினர் தேர்தலுக்குரூ.200, ஊராட்சித் தலைவர் மற்றும்ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தலா ரூ.600, மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மேற்கூறிய தொகையில் 50 சதவீதம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் தங்கள் பெயர்இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x