Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

தமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மண்டவியாவுக்கு தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நல்ல மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால், உரிய நேரத்தில் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அத்துடன், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தியதால், நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.50 லட்சம் ஏக்கரைவிட அதிகமாக 4.90 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

மேலும், தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்துள்ளதால் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் மாநிலத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் நடப்பாண்டில் 10 லட்சம் ஏக்கர் பரப்புக்கு மேலாக நெல் சாகுடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.72 லட்சம் ஏக்கர் கூடுதலாகும்.

தற்போது வரை அனைத்து பயிர்களின் சாகுபடி 25.40 லட்சம் ஏக்கருக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 3.838 லட்சம் டன் யூரியாவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும், 2.56 லட்சம் டன் யூரியா மட்டுமே உர நிறுவனங்களால் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 1.278 லட்சம் டன் உரம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே மாதங்களில் டிஏபி உரம் 1.20 லட்சம் டன் ஒதுக்கப்பட்டதில், 87 ஆயிரம் டன் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஏபி உரம் 33 ஆயிரம் டன் குறைவாக வழங்கப்பட்டுள்ளளது.

தமிழகத்தில் 25.40 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் அடிஉரம் மற்றும் மேல் உரம் இடுவதற்குயூரியா, டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், உரம் வழங்குவது குறைந்துள்ளதால், பயிர் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.

எனவே, உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை உர வழங்கல் திட்டத்தின்படி தமிழகத்துக்கு முழுமையாக வழங்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழகத்தில் உள்ள துறைமுகங்களிலும் புதுச்சேரியில் உள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடுசெய்துதர வேண்டும். இவ்வாறுகடிதத்தில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x