Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? - நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது.இந்நிலையில் புதிய தலைவரை நியமிக்க ராகுல் காந்தி ஆலோசித்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாநிலத்தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகளுடன் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர் சிறிவெல்ல பிரசாத், மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விரைவில் நடக்க உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியில் பெற வேண்டிய இடங்கள்குறித்தும், 2024 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறும்வகையில் தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “தமிழகத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இரட்டைத் தலைமையாலும், ஆட்சியை இழந்துவிட்டதாலும் அதிமுக பலவீனமாகிவிட்டது. ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்ற முக்கியத் தலைவர்களே திமுகவை சட்டப்பேரவையிலேயே பாராட்டும் அளவுக்குச் சென்று விட்டனர். அதிமுக பலவீனம் அடைவது பாஜகவுக்கு சாதகமாகவே முடியும். தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட அதிமுக தொண்டர்களை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவரும் வகையில் இனி கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கேற்ற மாநிலத் தலைவரை நியமிக்க வேண்டும்’’ என்று கூட்டத்தில் பலரும் கருத்து கூறியதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய பலரும், கோவை, திருச்சி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளை திமுகவிடம் கேட்டுப் பெறவேண்டும். அதிக நகராட்சிகள், பேரூராட்சிகளைப் பெற வேண்டும் என்று தினேஷ் குண்டுராவிடம் வலியுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x