

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பத்திர எழுத்தர் குணசீலன் (65). இவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தரக்கோரி 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர்.
அந்த தொகையை முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மீது மோசடி புகார் அளித்த குணசீலன், ராசிபுரம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும், இவர் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.