

தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சி, நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றப்பட உள்ளது. இதற்காக பேரூராட்சி. நகராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனுடன் அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
தற்போது தாம்பரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதையொட்டி சுற்றியுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றித் தருமாறு தாம்பரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ள அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் பேரூராட்சிகளான மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் ஆகிய பேரூராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய சம்மதம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி கடிதம் அனுப்பி உள்ளன.
அதேபோல் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் தீர்மானம் நிறைவேற்றி கடிதத்தை அனுப்பி வைக்கவில்லை.