Published : 31 Aug 2021 03:14 AM
Last Updated : 31 Aug 2021 03:14 AM

100 நாள் பணியில் பனை விதை நடவு: தமிழக அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சி

பனை விதை சேகரிப்பு மற்றும் நடவுப் பணிகளை 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் எனவும், இவற்றை நடவு செய்ய உகந்த சூழல் ஏறத்தாழ 2 மாதங்களே உள்ள நிலையில், இப்பணியில் இயற்கை ஆர்வலர்களுடன் தமிழக அரசு இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மழை ஈர்க்கும் மையங்களாகவும், நீர் நிலைகளின் காவலனாகவும், மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றுவதே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது பனை விதைகள் சேகரிப்பு, நடவு ஆகியவற்றை மேற்கொள்வதில் இயற்கை ஆர்வலர்களுடன் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பசுமை சிகரம் அறக்கட்டளைத் தலைவர் யோகநாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தற்போது கிடைக்கும் பனம் பழங்களை லேசாக உலர்த்தி விட்டு, ஈரம் காய்வதற்குள் நடவு செய்ய வேண்டும். இதற்கு உகந்த காலம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் தான். இதற்கு பின்னர் இவற்றை நடவு செய்தால் பயன் இருக்காது.

பனை மேம்பாட்டு இயக்கத்தை அறிவித்துள்ள தமிழக அரசை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் சேகரிப்பு மற்றும் நடவு ஆகியவற்றை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கிராம இளைஞர்களின் ஒத்துழைப்புடன் 100 நாள் திட்டத் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். பனை விதைகள் அதிக அளவில் இருக்கும் இடங்களிலிருந்து அவற்றை விதைகள் கிடைக்காத இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வசதிகளை வேளாண் துறை மூலம் ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.

கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜவேலு கூறியது: பனை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து, தவிர்க்க முடியாத சூழலாக இருந்தால் பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

தற்போது பல இடங்களில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் தான் பனை நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசு உதவினால் இன்னும் அதிக அளவிலான விதைகளை நடவு செய்ய முடியும். இந்தப் பணியில் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

தமிழகம் முழுவதும் பனை மரங்கள் வளர்ப்பை பரவலாக்குவதன் மூலம் நிலத்தடி நீர்வளம் மேம்படுத்தப்படும். இதில் ஆர்வமுள்ளவர்களை அந்தந்த ஒன்றிய வாரியாக ஒருங்கிணைத்து, மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்தி எஞ்சியுள்ள இரு மாதங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொண்டால் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சி இந்த ஆண்டே நனவாகத் தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x