

மத்திய சிறைகளில் கைதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சிறைக் காவலர்களுக்கு சட்டையில் பொருத்தும் கேமராக்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள், 5 மகளிர் சிறப்பு சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 15,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சிறை வளாகத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அகன்ற திரை மூலம் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.
எனினும் சிறை வளாகம் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் சிறை நிர்வாகத்தால் கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் நடைபெறக் கூடிய கைதிகளுக்கு இடையேயான மோதல், கைதிகள் மற்றும் காவலர்களுக்கு இடையேயான வாக்குவாதம் போன்றவற்றை வீடியோ காட்சிகளாக பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக சிறைக் காவலர்களுக்கு சட்டையில் அணிந்து கொள்ளக்கூடிய கேமராக்களை வழங்க சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக புழல்-1, புழல் -2, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை ஆகிய 9 மத்திய சிறைகள், புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி ஆகியவற்றுக்கு தலா 5 என மொத்தம் 50 கேமராக்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறைக்குள் காவலர்கள் ரோந்து செல்லும்போதும், கைதிகளின் அறைகளைச் சோதனையிடச் செல்லும்போதும் சில நேரங்களில் கைதிகள் வாக்குவாதம் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களை அங்கிருந்து பறிமுதல் செய்யும்போது, அவை தங்களுடையது இல்லை எனக்கூறி தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் அவர்களின் அறைகளில் இருக்கும் பொருட்கள், கைதிகள் நடந்து கொள்ளும் முறை போன்றவற்றை காட்சிகளாக பதிவு செய்ய இந்த கேமராக்கள் மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல சிறைக்குள் சிசிடிவியின் பார்வைக்கு அப்பால் உள்ள ஏதேனும் ஒரு இடத்தில் கைதிகளுக்குள் மோதலோ அல்லது விரும்பத்தகாத செயல்களோ நடைபெற்றால், உடனடியாக கேமரா அணிந்துள்ள காவலர்களை அங்கு அனுப்பி நிகழ்வுகளை ஆவணப்படுத்த வசதியாக இருக்கும்.
தேவை ஏற்பட்டால் காவலர்கள் தாங்கள் பதிவு செய்யக்கூடிய காட்சிகளை, கட்டுப்பாட்டு அறைக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கும் இந்த கேமராவில் வசதி அளிக்கப்பட உள்ளது. கேமராக்களை கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் அனைத்து மத்திய சிறைகளுக்கும் இந்த கேமராக்கள் வழங்கப்பட உள்ளன’’ என்றனர்.